வருகின்ற 2021ம் ஆண்டு மே மாதத்தில், உலக நாடுகளில் இயல்பு வாழ்க்கையானது, பழைய நிலைக்குத் திரும்பி விடும் என, அமெரிக்க மருத்துவ நிபுணர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி, தற்பொழுது வரை உலகின் பல நாடுகளிலும் இந்த கொரோனா வைரஸானது அதிகளவில் பரவி வருகின்றது. உலகிலேயே மிகவும் மோசமாகப் பரவியுள்ள வைரஸாக இது தற்பொழுது மாறியுள்ளது. இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகளில், பல நாடுகளும் ஈடுபட்டு உள்ளன. இந்த வைரஸிற்கு ரஷ்ய அரசு ஸ்புட்னிக் வி என்ற மருந்தினை கண்டுபிடித்து, தன்னுடைய மக்களுக்கு வழங்கி வருகின்றது.
இந்த சூழலில், அமெரிக்காவின் ஃபிபிசர் என்ற நிறுவனம் மற்றும் மாடர்னா என்ற நிறுவனமும் தங்களுடைய மருந்துகள் 95% வெற்றி பெற்று உள்ளதாக அறிவித்து உள்ளன. இது குறித்துப் பேசியுள்ள, அமெரிக்காவின் தலைமை அறிவியல் ஆலோசகர் மான்செஃப் ஸ்லோயி, இந்த வைரஸினைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் உலகின் பல நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன. இந்த வைரஸிற்கான மருந்தானது, இந்த ஆண்டின் டிசம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வந்துவிடும்.
அவ்வாறு இல்லாத பட்சத்தில், வருகின்ற ஜனவரி மாதத்தில் இந்த வைரஸிற்கு எதிரான மருந்தானது, பயன்பாட்டிற்கு வந்துவிடும். அத்துடன், இந்த மருந்தானது முதலில் முதல்நிலைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும். அவர்களைத் தொடர்ந்து, அவசரப் பிரிவு நோயாளிகள், செவிலியர்கள், மருத்துவர்கள், உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து, மற்ற அனைவருக்கும் அமெரிக்காவில் வழங்கப்படும் என்றுக் கூறியுள்ளார்.
இந்த மருந்தானது பயன்பாட்டிற்கு வந்த உடன், வருகின்ற மே மாதத்தில் உலகமானது பழைய இயல்பு நிலைக்குத் திரும்பி விடும் எனவும், பொதுமக்கள் மகிழ்ச்சியாக வாழலாம் எனவும் கூறியுள்ளார்.