உலகளவில் தற்பொழுது ஓடிடி வலைதளத்தில் வெளியாகி, சக்கைப் போடு போடும் திரைப்படமாக சூரரைப் போற்று திரைப்படம் உள்ளது. இந்தப் படத்தில், சூர்யா உண்மைக் கதையினை தழுவி எடுக்கப்பட்டக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த உண்மைக் கதையானது, டெக்கான் ஏர் நிறுவனத்தினை உருவாக்கிய ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கையினை, அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த ஏர் டெக்கான் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதே, ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்து ஒன்று தான். ஏனெனில், இந்த ஏர் டெக்கான் நிறுவனமானது விமான சேவைக்கான சந்தையில் நுழைந்ததும், மாபெரும் புரட்சியே நடைபெற்றுள்ளது என்று கூறினால், அது மிகையாகாது. அந்த அளவிற்கு, இந்த விமான நிறுவனம் இந்திய விமானத்துறையில் மிகப் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனை உருவாக்கிய ஜி ஆர் கோபிநாத், இந்திய விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தன்னுடைய இரண்டு நண்பர்களுடன் இணைந்து தான், இந்த ஏர் டெக்கான் நிறுவனத்தினை உருவாக்கினார்.
இது குறித்து அவர் பின்னர் விவரிக்கையில், அலுவலகத்தில் துப்புறவு பணிபுரியும் பெண், ஆட்டோ ரிக்சா ஓட்டுபவர், உள்ளிட்ட சாமானிய மக்கள் அனைவருமே இந்த விமான சேவையினைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே, இந்த விமான சேவையினைத் துவங்கினேன் என்றுக் கூறியுள்ளார். இவர் ஏர் டெக்கான் நிறுவனத்தினைத் துவங்கும் முன், விமான சேவையானது இந்தியாவினைப் பொறுத்தமட்டில், பணக்காரர்களுக்கான ஒன்றாக இருந்து வந்தது.
அதனையே, தன்னுடைய நிறுவனத்தின் மூலதனமாக மாற்றினார். இதுவரை இல்லாத அளவில், விமான சேவையினை மிகக் குறைந்த விலைக்கு வழங்குவதாக, நாடு முழுவதும் அறிவித்தார். இது பெரிய அளவில் சர்ச்சையினையும், அதே சமயம் பரபரப்பையும் ஏற்படுத்தியது. ஆனால், சொன்னதோடு மட்டுமல்லாமல், செய்தும் காட்டினார். விமான சேவையின் பொழுது வழங்கப்பட்ட, ஆடம்பர வசதிகளை நீக்கினார். அதன் மூலம், விமான செலவுகளைக் குறைத்தார்.
ஆகஸ்ட் 25ம் தேதி 2003ம் ஆண்டு, ஏர் டெக்கான் தன்னுடைய சேவையினை மிகச் சிறிய அளவில் துவக்கியது. முதன் முதலாக பெங்களூர் முதல் ஹூப்லி வரையிலும் இந்த சேவை நடைபெற்றது. இதற்காக இரண்டு ஏடிஆர் 42-320 என்ற விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. பின்னர், 2004ம் ஆண்டு இரண்டு ஏர்பஸ் ஏ320 ரக விமானங்களை வாங்கும் அளவிற்கு, ஏர் டெக்கான் நிறுவனம் சிறப்பான வளர்ச்சியினை கண்டது. அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 2005ம் ஆண்டு 30 ஏடிஆர் 42-320 விமானங்களை வாங்கியது.
இந்தியாவின் 50க்கும் மேற்பட்ட இடங்களுக்கு, தங்களுடைய விமான சேவையினை அந்த நிறுவனம் வழங்கியது. 2005-2006 ஆண்டிற்கான நிதியாண்டில் மட்டும், இந்த நிறுவனம் 30% வளர்ச்சியினை ஏட்டியது. 2006ம் ஆண்டில், இந்தியாவின் 3வது மிகப் பெரிய விமான நிறுவனமாக ஏர் டெக்கான் உருவெடுத்தது. 2006ம் ஆண்டு 30 ஏர்பஸ் ஏ320 விமானங்களை வாங்குவதற்கு ஆர்டர் கொடுத்தது. 2007ம் ஆண்டு இந்தியாவின் 2வது மிகப் பெரிய விமான நிறுவனமாக இந்த நிறுவனம் உருமாறியது.
இது, பல விமான நிறுவன முதலைகளுக்கு தலைவலியாக மாறியது. தொடர்ந்து, அந்த விமான நிறுவனத்தினை வாங்கும் முயற்சியில், பல தொழிலதிபர்களும் விமான சேவை நிறுவனங்களும் ஈடுபட்டன. தொழிலதிபர் விஜய் மல்லையா, தன்னுடைய விமான நிறுவனமான கிங் பிஸ்ஸருடன் இணைப்பதற்காக, டெக்கான் நிறுவனத்துடன் பேரம் பேசினார். இருப்பினும், தொடர்ந்து சுதந்திரமாக செயல்படவே, ஏர் டெக்கான் நிறுவனத்தின் உரிமையாளர் ஜிஆர் கோபிநாத் விரும்பினார்.
இருப்பினும், இதன் வளர்ச்சியினைப் பிடிக்காத பண முதலைகள் இந்த நிறுவனத்திற்கு எதிராக, சதி வலையினை உருவாக்கினர். 2007ம் ஆண்டு மட்டும் 213 கோடி ரூபாய் அளவிற்கு, இந்த நிறுவனம் கடும் நஷ்டத்தினைச் சந்தித்தது. அதனைத் தொடர்ந்து, ஏர் டெக்கான் நிறுவனமானது, சிம்பிளிஃபைடு டெக்கான் என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, இந்த நிறுவனமானது 2008ம் ஆண்டு விஜய் மல்லையாவின் கிங்பிஷ்சர் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது.
தற்பொழுது இந்த விமான சேவையானது, கிங்பிஷ்சர் ரெட் என்ற பெயரில், வானத்தில் கடனுக்குள்ளாகி பறந்து கொண்டு உள்ளது.