பட்ஜெட் 2021! விற்கப்பட்டவைகளும்! புதிய திட்டங்களும்! முழு பார்வை!

02 February 2021 அரசியல்
nirmala.jpg

இந்தியா முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட்டினை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இந்தியாவிலேயே முதன் முறையாக, காகிதம் பயன்படுத்தப்படாத டிஜிட்டல் வடிவிலான பட்ஜெட்டானது தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில், இந்த பட்ஜெட்டினை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பொழுது, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலத்தினைச் சேர்ந்த எம்பிக்கள் கருப்பு உடை அணிந்து வந்தனர். இந்த பட்ஜெட்டில் வருகின்ற 2022ம் ஆண்டிற்குள், ஏர் இந்தியா விமான சேவையினை முழுமையாக விற்கும் செயல் நடத்தப்படும் என்றுத் தெரிவித்தார்.

பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன், ஏர் இந்தியா, IDBI, BEML, PAWAN HANS, SCI, CCI, CONCOR உள்ளிட்ட நிறுவனங்களும் விற்கப்படும் என்றுத் தெரிவித்தார். இரண்டு வங்கிகள் மேலும் தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என்றும் அறிவித்தார். தனியார் மயமாக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்களின் மூலம், நடப்பாண்டில் 1.75 லட்சம் கோடி திரட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்து உள்ளார். ஐடிபிஐ வங்கியுடன் மற்றொரு வங்கியின் பங்குகளை விற்கவும் உள்ளதாக அவர் அறிவித்து உள்ளார்.

இந்தப் பட்ஜெட்டில், தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு அதிக கவனம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த திட்டங்களை தாராளமாக மத்திய அரசு வழங்கியுள்ளதை நம்மால் காண முடிகின்றது. 75 வயதிற்கு மேல் உள்ள மூத்த குடிமகன்களுக்கு, வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. வருமான வரி உச்சவரம்பில் எவ்வித மாற்றமும் அறிவிக்கப்படவில்லை.

வீட்டு வசதி மற்றும் விமானங்களை வாடகைக்கு விடக் கூடிய நிறுவனங்களுக்கு, ஓராண்டிற்கு வரி விலக்கு வழங்கப்பட உள்ளது. பருத்தியின் மீதான சுங்கவரியானது 10% அதிகரிக்க உள்ளது. இதனால், உடைகளின் விலை உயரும் நிலை ஏற்பட்டு உள்ளது. அதே போல் பட்டு மற்றும் பட்டு நூல் மீதான சுங்க வரியானது, 10 முதல் 15 சதவிகிதம் வரை அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சூரிய சக்தி சம்பந்தப்பட்ட கட்டமைப்பு பொருட்களை இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்தும் பொருட்டும், உள்நாட்டில் அதன் உற்பத்தியினை அதிகரிக்கும் பொருட்டும் அதன் மீதான வரியும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. தேயிலைத் தோட்ட பணியாளர்களின் குழந்தைகளின் நலனுக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. குஜராத் மாநிலத்தில் புதிய, பொருளாதார தொழில்நுட்ப முனையம் ஒன்று கட்டப்பட உள்ளது. புலம்பெயரும் தொழிலாளர்களுக்கான ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு விரைவுப்படுத்தப்பட்டு, தீவிரமாக அமலுக்கு வரும்.

கார்ப்பரேட் டாக்ஸ் என்பது, உலகிலேயே இந்தியாவில் தான் மிகக் குறைவாக வசூலிக்கப்படுகின்றது. வெளிச் சந்தையில் இருந்து சுமார் 15 லட்சம் கோடியினை, திரட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. தேசிய மொழிபெயர்ப்பு இயக்கம் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால், உள்நாட்டு மொழிகளுக்கு ஊக்கமளிக்கப்படும். தற்போதைய நிதிப் பற்றாக்குறையினை வருகின்ற 2025-2026ம் ஆண்டின் பொழுது 4.5 சதவிகிதமாக குறைக்க, முயற்சிகள் மேற்கொள்ளப்படும். வருகின்ற நிதியாண்டில், நிதிப் பற்றாக்குறையானது 6.8 சதவிகிதமாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.

புதியதாக நியூ ஸ்பேஸ் இந்தியா எனும் நிறுவனம் துங்கப்பட உள்ளது. இது, பிஎஸ்எல்வி சிஎஸ்51 என்ற வாகனத்தினை பயன்படுத்த உள்ளது. 2021ம் ஆண்டு ஆளில்லாத ககன்யான் விண்கலமானது அனுப்பப்பட உள்ளது. தேசிய ஆய்வு மையத்திற்கு 50,000 கோடி ஒதுக்கப்படுகின்றது. 100 புத்தம் புதிய சைகின் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்ப்பட்டு உள்ளது. லே பகுதியில் புதியதாக மத்தியப் பல்கலைக்கழகமானது அமைக்கப்பட உள்ளது. மலைவாழ் மக்களுக்காக 750 ஏகலைவா பள்ளிகள் திறக்கப்படும்.

அனைத்து விதமான தொழிலாளர்களுக்கும், குறைந்தபட்ச ஊதியத் திட்டமானது நிர்ணயிக்கப்பட உள்ளது. கட்டுமானத் தொழிளார்களின் நலனுக்காக புதிய வலைதளம் உருவாக்கப்பட உள்ளது. வருகின்ற நிதியாண்டில் விவசாயத்தினை ஊக்குவிப்பதற்காக 16.5 லட்சம் கோடி ரூபாயினை கடனாக வழங்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது. உஜ்வாலா திட்டத்தின் மூலம், 8 கோடி குடும்பங்களுக்கு காஸ் இணைப்பு வழங்கப்பட்ட்டு உள்ளது. சாலைப் போக்குவரத்திற்காக 1,18,101 கோடி ரூபாயானது ஒதுக்கப்பட உள்ளது.

2023ம் ஆண்டிற்குள் அகல ரயில்பாதைகள் அனைத்தும், மின்மயமாக்கப்படும். ரயில்வேக்கு 1,07,100 கோடி ரூபாயானது செலவிற்காக ஒதுக்கப்பட உள்ளது. மேலும் சில விமான நிலையங்கள் தனியாருக்கு வழங்கப்பட உள்ளது. தமிழகத்தினைப் பொருத்தமட்டில், 1.03 லட்சம் கோடி ரூபாய் செலவில், அடுத்த ஆண்டு 3,500 கிலோமீட்டருக்கு சாலை அமைக்கும் பணி துவங்க உள்ளது. மதுரை முதல் கொல்லம் வரையிலும், சித்தூர் முதல் தச்சூர் வரையிலும் புதிய தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட உள்ளன. சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் சேவையின் 2வது கட்ட திட்டமானது அனுமதிக்கப்பட உள்ளது. இதற்காக 63,246 கோடி ரூபாயானது ஒதுக்கப்பட உள்ளது. இதில், 118.9 கிலோமீட்டர் தொலைவிற்கு, புதிய பாதை அமைக்கப்படும்.

இந்திய அளவில் காலாவதியான வாகனங்களை உடைக்க, 15 ஆண்டுகள் ஓடிய வாகனங்கள் தகுதியுள்ளவையாக அறிவிக்கப்பட்டு உள்ளன. உரிமையாளர்கள் இதர வாகனங்களையும் தாமாக முன்வந்து உடைக்க வழங்கலாம். காற்று மாசினைக் கட்டுப்படுத்த 2,217 கோடி ரூபாய் ஒதுக்கீடு, நீர்நிலைகளைப் பராமரிக்க ஜல்ஜீவன் திட்டம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட உள்ளன.

HOT NEWS