கொரோனா வைரஸிற்கு உரிய தடுப்பு மருந்தானது, தற்பொழுது டார்க் வெப்பில் கிடைப்பதைக் கண்டு சர்வதேச அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
எது எங்கு கிடைக்கின்றதோ, இல்லையோ, டார்க் வெப் எனும் மாய வலையில் கிடைக்காத விஷயங்களே இல்லை எனவும் அளவிற்கு, அந்தப் பகுதியானது நாளொறு மேனியும், பொழுதொரு வண்ணமுமாகவும், பரந்து விரிவடைந்து கொண்டே இருக்கின்றது. விபச்சாரம், ஆள் கடத்தில், ஆயுத விற்பனை, மனிதர்கள் விற்பனை, மருந்து வியாபாரம், போதைப் பொருள் விற்பனை உள்ளிட்டப் பல சட்டவிரோத விற்பனைகள் அனைத்தும் இங்கு தான் நடைபெறுகின்றன.
இந்த வலைதளங்களுக்குள் அவ்வளவு எளிதாக நம்மால் நுழைய முடியாது. அதற்காகப் பிரத்யேக செயலிகளும் உள்ளன. அவைகளைப் பயன்படுத்தினால் தான், இங்கு நம்மால் செல்ல இயலும். இங்கு தற்பொழுது புதிய விஷயம் ஒன்று உலகளவில், பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுக்கப் பரவியுள்ள கொரோனா வைரஸிற்கு, தற்பொழுது தான் பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களின் தடுப்பு மருந்துகள் விற்பனைக்கு வந்துள்ளன. ஆனால், அதற்குள் கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்தானது, இந்த டார்க் வெப் எனப்படும் மாய வலையில் கிடைக்க ஆரம்பித்து உள்ளன.
இந்த வலைதளப் பக்கங்களில், கொரோனாவிற்கான மருந்தானது 18,000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. பணம் குறைவாகக் கொடுக்கும் பட்சத்தில், மருந்தின் அளவானது குறைத்துக் கொண்டு வழங்கப்படும். இந்த மருந்தானது, இங்கிலாந்து, இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இருந்து பெறப்படுவதாக, கூறப்பட்டு உள்ளது. இந்த மருந்தினை எடுத்துக் கொண்டால், கொரோனா பரவாது எனவும், உடனடியாக சரியாகிவிடும் எனவும் கூறப்பட்டு உள்ளது. இதனைத் தற்பொழுது சர்வதேச போலீசான இண்டர்போல், தீவிரமாக விசாரித்து வருகின்றது.
யாராவது இங்கு மருந்து வாங்கினார்களா, அவ்வாறு வாங்கியவர்களுக்கு என்ன ஆனது, இதனை எங்கிருந்து பெறுகின்றனர், எவ்வாறு இதனை தயாரித்தனர், உண்மையில் இது கொரோனாவிற்கான மருந்து தானா என்பது உள்ளிட்டப் பலக் கேள்விகள் தற்பொழுது எழுந்துள்ளன.