திமுக தலைமையில் அதன் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும், இன்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம், மூன்று புதிய வேளாண் மசோதாக்களை அமலுக்குக் கொண்டு வந்தது. இதனை எதிர்த்து, தற்பொழுது 23 நாட்களாக டெல்லியின் நுழைவு வாயிலில், பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தங்களுடையப் போராட்டங்களை கைவிடும் படி மத்திய அரசுக் கூறியுள்ளது.
மேலும், மூன்று சட்டங்களையும் நீக்க முடியாது என, திட்டவட்டமாக அறிவித்து உள்ளது. இந்த சூழலில், மூன்று சட்டங்களையும் நீக்கும் வரை, போராட்டத்தில் இருந்து பின் வாங்கப் போவது கிடையாது என விவசாயிகள் தெரிவித்து உள்ளனர். இவர்களுக்கு உலகம் முழுவதும் ஆதரவுப் பெருகி வருகின்றனர். இந்த சூழலில், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் திமுக தலைமையில், அதன் கூட்டணிக் கட்சிகள் போராட்டம் நடத்தும் என, அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த சூழலில், அதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் திட்டமிட்டப்படி, போராட்டம் தொடரும் என திமுக தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து, இன்று காலையில் சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்று வருகின்றது. ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் வைகோ, முத்தரசன், திருமாவளவன், ஜவஹிருல்லா உள்ளிட்டப் பலரும் கலந்து கொண்டு உள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் பேசிய முக ஸ்டாலின், கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்றுக் கூறியுள்ளார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள விவசாயிகளுக்கு தங்களுடைய முழு ஆதரவினையும் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்து உள்ளார். அதே சமயம், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை மக்கள் விரோத சக்திகள் எனக் கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.