வருகின்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், கல்விக் கடன் தள்ளுபடி குறித்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக அதிமுக இடையே, தற்பொழுது தேர்தல் போரானது நடைபெற்று வருகின்றது. அடுத்த ஆட்சியினைப் பிடித்தேத் தீர வேண்டும் என திமுகவும், ஆட்சியினைத் தக்க வைக்க வேண்டும் என அதிமுகவும் கங்கணம் கட்டிக் கொண்டு போட்டிப் போட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி, கல்விக் கடன் தள்ளுபடி, விவசாயக் கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்டவைகளை திமுகவின் சார்பில் முக ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்து வருகின்றார்.
யாரும் எதிர்பாராத விதமாக விவசாயப் பயிர்கடன்களை, எடப்பாடிப் பழனிச்சாமி தள்ளுபடி செய்தார். இதனால், 12 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்து உள்ளனர். திமுக தலைவர் முகஸ்டாலினோ, நான் சொல்வதை தான் எடப்பாடி பழனிசாமி செய்து வருகின்றார் எனக் கூறி வருகின்றார். இந்த நிலையில், மாணவர்களின் கல்விக்கடனையும் தள்ளுபடி செய்ய உள்ளாராம் எடப்பாடி பழனிசாமி.
இதற்காக, தன்னுடைய உயர்மட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து வருகின்றார். அதனடிப்படையில் பார்க்கும் பொழுது, வருகின்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் பொழுது, கல்விக் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பினையும், அவர் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.