நம் அனைவருக்கும் இயற்கையின் மீது, அதிகளவில் ஆர்வமும், அக்கறையும் உண்டு. அனைவரும் விரும்பி பூச்செடிகளை வளர்ப்பர். அப்படி வளர்க்கப்படும் பூச்செடிகளில், ரோஜா பூச்செடிகளே அதிகம் வளர்க்கின்றனர். அவ்வாறு வளர்க்கப்படும் பூச்செடிகள் சரியாக வளராமல் இறந்து விடுகின்றன. இந்த கட்டுரையில், எவ்வாறு ரோஜா செடி வளர்ப்பது எனப் பார்ப்போம்.
ரோஜா செடியில் பல வகைகள் உள்ளன. நாட்டு ரோஜா, பன்னீர் ரோஜா, பட்டர் ரோஜா என பல பிரிவுகள் உள்ளன. இவைகள் செடியாக வளர்ந்தாலும், கொடியாக வளரும் பிரிவும் உள்ளன. இவைகளுக்கு போதிய அளவிற்கான இடமும், வளமும் கிடைத்துவிட்டால் போதும். காலம் முழுக்கப் பூக்கும் தன்மை உடையவை இந்த ரோஜா செடிகள்.
ரோஜா செடியினை, நர்சரிகளில் 30 ரூபாய் முதல் வாங்க இயலும். இதனைப் பராமரிப்பதும் மிகவும் எளிமையான ஒன்று. ஒரு மண் தொட்டியில், செம்மண் மற்றும் கொக்கோபீட் கலவை அல்லது செம்மண்ணை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில், இந்த ரோஜா கன்றினை நட வேண்டும். அதற்கு தினமும், காலையிலும் மாலையிலும் நீர் ஊற்ற வேண்டும். இந்த செடிக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை, மண்புழு உரம் இட வேண்டும்.
அதே போல், வீட்டில் ஏற்கனவேப் பயன்படுத்திய டீத் தூள், காபி தூள், முட்டை ஓடு, வாழைப்பழத் தோல் ஆகியவைகளை உரமாக வழங்க இயலும். முட்டை ஓட்டினை, பொடியாக்கி, அதனை ஏற்கனவேப் பயன்படுத்திய டீத்தூள் அல்லது காபித்தூளுடன் கலந்து, பின்னர், வாழைப்பழத் தோளினை சிறிது சிறிதாக நறுக்கி இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து, அதிகாலையில், உரமாக இட வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம், எவ்வித செயற்கை உரங்களும் இல்லாமல், இயற்கையாகவே இந்த ரோஜா செடியானது செழித்து வளர ஆரம்பித்து விடும். மேலும், இந்த செடியில் அவ்வப்பொழுது, கிளைகளை ப்ளூனிங் எனப்படும் முறையில், வெட்டி விட வேண்டும். அவ்வாறு வெட்டி விடும் பொழுது, செடியானது மீண்டும் கிளைத்து வளர ஆரம்பிக்கும். இந்த செடியில் பூச்சிகள் தொல்லையும் ஏற்படும்.
எனவே, அவ்வப்பொழுது, மஞ்சள் கலந்த நீரினை, செடியின் தண்டுப் பகுதியில் தடவ வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், பூஞ்சைத் தாக்குதல், பூச்சித் தாக்குதல்களில் இருந்து இந்த ரோஜா செடியானது தப்பித்து விடும். அவ்வப்பொழுது, நீர் பீச்சும் குழாயினை வாங்கி, அதனைப் பயன்படுத்தி, வேகமாக நீர் தெளிக்கும் பொழுது, செடியில் ஒட்டிக் கொண்டு இருக்கும் மாவுப்பூச்சிகள் இறந்துவிடும். பூச்செடியும் ஆரோக்கியமாக இருக்கும்.
ரோஜா செடியினை வளர்ப்பதன் மூலம், மனதில் அமைதி நிலவும். மற்ற ரோஜாக்களை விட, நாட்டு ரோஜா மற்றும் பன்னீர் ரோஜாக்கள் நல்ல மனம் உள்ளவையாக இருக்கும். இவைகளின் விலையும் மிகக் குறைவு. இந்த ரோஜா செடிகளுக்கு, மதிய நேரத்தில் தண்ணீர் ஊற்றாமல் இருப்பது நல்லது. ஒரு நாளைக்கு குறைந்தது ஆறு மணி நேரம் வெயில் படும்படி இருக்க வேண்டியது அவசியம்.