சிபி நடிப்பில் நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியாகி இருக்கும் திரைப்படம் கபடதாரி.
எப்பொழுதும் தமிழ் சினிமாவில் ஒரு ஜேனர் வெற்றி பெற்று விட்டால், அது போலவே படங்களை எடுப்பார்கள். காஞ்சனா வெற்றி பெற்றதும், அது போலவே நிறையப் படங்கள் வெளியாகின. ராட்சசன் படம் வெற்றி பெற்ற பிறகு, அது போலவே பலத் திரைப்படங்கள் க்ரைம் த்ரில்லராக வெளியாகி இருக்கின்றன. இதில், பலப் படங்கள் தோல்வியினைத் தழுவின. ஆனால், அவைகளை எல்லாம் சரியாகக் கவனித்து உருவாக்கப்பட்டு உள்ளப் படம் தான் கபடதாரி.
இப்படமானது, காவலுதாரி என்ற கன்னடப் படத்தின் ரீமேக்காகும். கன்னடத்தில் இருந்தக் கதையினையும், கதாபாத்திரங்களையும் துளிக் கூட மாத்தாமல் அப்படியே படமாக்கியுள்ளனர். இந்தப் படமானது, சிபிராஜிற்கு ஒரு புதிய தெம்பினை அளித்திருக்கும் என்பதில், மாற்றுக் கருத்து இல்லை. டிராபிக் எஸ்ஐயாக இருக்கும் சிபிக்கு, க்ரைம் ப்ரான்ச்சில் பணிபுரிய ஆசை. ஒரு வழக்கில் தானாக ஈடுபடுத்திக் கொள்கின்றார். காலையில் காவல்துறைக்காகவும், மாலையில் தன்னுடைய ஆசைக்காகவும் தானாக வேலை செய்கின்றார்.
மூன்று எலும்புக் கூடுகளைக் கண்டறியும் சிபி, அது குறித்து ஆய்வு செய்கின்றார். அதற்கு யார் காரணம், ஏன் எனப் பலக் கேள்விகளுக்கும் சஸ்பென்சான பதிலினை, இயக்குநர் தன்னுடையத் திரைக்கதையின் மூலம் நமக்குத் தந்துள்ளார். படத்தில் யார் தான் வில்லன் என யாராலும் எளிதாக யூகிக்க முடியவில்லை என்றாலும், பல இடங்களில் கதையின் போக்கினைக் கவனிக்க முடிகின்றது.
படத்தின் நாயகியாக நந்திதா. உண்மையில் பெரிய அளவில் சிபிக்கும், நந்திதாவிற்கும் இடையில் காட்சிகள் கிடையாது. நாசர் தன்னுடைய வேலையினை வழக்கம் போல, சிறப்பாக செய்துள்ளார். படத்தின் கதாபாத்திரங்கள் அனைத்தும் கச்சிதமாகப் பொருந்தி இருந்தாலும், ஏனோ படமானது நம்மை ரசிக்க வைக்க மறுக்கின்றது. ஒரு முறை திரையறங்கில் பார்க்கலாம் என்ற அளவில் உள்ளது கபடதாரி.