கைலாசாவில் ஒரு லட்சம் பேருக்கு அனுமதி! ஆஸ்திரேலியா வந்தால் அழைத்து செல்ல ஏற்பாடு!

20 December 2020 அரசியல்
kailasadollar.jpg

நித்தியானந்தா தன்னுடைய நாட்டில் ஒரு லட்சம் பேருக்கு தற்பொழுது குடியுரிமை வழங்க உள்ளதாக, அவர் தெரிவித்து உள்ளார்.

தனக்கென ஒரு நாட்டினை உருவாக்கி உள்ளதாக கூறி வருகின்ற நித்யானந்தா, எங்கு இருக்கின்றார் என இதுவரை சர்வதேச போலீசாருக்கும் தெரியவில்லை. அந்த அளவிற்கு தன்னை மிகவும் பாதுகாப்பாக வைத்துள்ளார். இந்தியாவில் பலக் குற்றச்சாட்டுகள் அவர் மீது, வைக்கப்பட்டு உள்ளன. தன்னுடைய மகள்கள் இருவரையும், நித்தியானந்தா கடத்திச் சென்று விட்டார் என குஜராத்தினைச் சேர்ந்தவர் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் நித்தியினை ஆஜராகச் சொல்லியும், ஆஜராகாததால் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த சூழலில், தன்னை யாரும் தேட வேண்டாம் எனவும், தான் கைலாசா என்றப் புதிய நாட்டினையே உருவாக்கி இருப்பதாகவும் நித்தியானந்தா, தன்னுடைய யூடியூப் சேனல் மூலம் தெரிவித்து வருகின்றார். மேலும், தன்னுடைய நாட்டிற்கென புதியதாக தங்கத்தில் நாணயம், அரசாங்க துறைகள் உள்ளிட்ட அனைத்தையும் வெளியிட்டு பரபரப்பினை வெளியிட்டார். தன்னுடைய நாட்டிற்கு விசா வாங்குவதற்கும் வலைதளப் பக்கத்தினை உருவாக்கினார். அவருடைய கைலாசா நாட்டிற்குச் செல்லப் பலரும் விருப்பம் தெரிவித்து வருவதாகவும், 40 லட்சம் பேர் தன்னுடைய நாட்டில் குடியுரிமைக்காக பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், தொடர்ந்து பிரசங்கம் செய்து வருகின்ற நித்யானந்தா, தற்பொழுது புதியதாக அதிரடி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளார். அதில், கைலாசா நாட்டினை யார் வேண்டும் என்றாலும் சுற்றிப் பார்க்கலாம் எனவும், அதற்கு தற்பொழுது அனுமதி வழங்குவதாகவும் தெரிவித்து உள்ளார். அதற்காக ஆஸ்திரேலியாவிற்கு, தன்னுடைய சொந்த செலவில் வர வேண்டும் எனவும், அங்கிருந்து தன்னுடைய நாட்டின் விமானமான கருட விமானத்தின் மூலம் கைலாசாவிற்கு அழைத்துச் செல்வதாகவும் தெரிவித்து உள்ளார்.

ஆஸ்திரேலியாவில் இருந்து கைலாசாவிற்கு இலவசமாக அழைத்துச் செல்வதாகவும், அங்கு உணவு, உடை, இருப்பிடம் அனைத்தும் இலவசம் எனவும், பின்னர் கைலாசாவில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு இலவசமாக அழைத்து வந்து விடுவதாகவும் தெரிவித்து உள்ளார். ஆஸ்திரேலியாவில் இருந்து மீண்டும் இந்தியாவிற்கு தங்களுடையச் சொந்தச் செலவில் திரும்பிக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார். கைலாசாவில் இருப்பவர்களை, பரமசிவனாகப் பார்க்க வேண்டும் எனவும், அனைவருமே அங்குக் கடவுள்கள் எனவும் கூறியுள்ளார்.

மேலும், தற்பொழுது முதற்கட்டமாக தன்னுடைய கைலாசா நாட்டில் ஒரு லட்சம் பேருக்குக் குடியுரிமை வழங்க இருப்பதாகவும், அதற்கானப் பணிகள் துரிதக் கதியில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்து உள்ளார். இது தற்பொழுது, நித்தியின் ஆதரவாளர்களையும், மீம்ஸ் கிரியேட்டர்களையும் குஷியாக்கி உள்ளது.

HOT NEWS