மகாராஷ்டிராவில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக, 10 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் பந்தாரா மாவட்டத்தில் அமைந்துள்ளது அரசு மருத்துவமனை. அந்த மருத்துவமனையில் அதிகாலையில் திடீரென்று புகை மூட்டம் கவனிக்கப்பட்டு உள்ளது. குழந்தைகள் பிரிவில் இருந்து புகை வருவதைக் கவனித்த செவிலியர், அப்பொழுது பணியில் இருந்து மருத்துவர்கள் மற்றும் பிற ஊழியர்களை அழைத்துள்ளார். அவசர அவசரமாக தீயணைப்புத் துறையினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
உள்ளே பணிபுரிந்த ஊழியர்கள் விரைவாக செயல்பட்டு, குழந்தைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் 3 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். 7 பேர் தீயினால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக பலியாகி இருக்கின்றனர். அங்கிருந்து 7 பேரினை பத்திரமாக அரசு மருத்துவமனை ஊழியர்கள் மீட்டனர். இது தற்பொழுது இந்தியா முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும், உயிரிழந்தவர்களுக்காக அவர்களுடையக் குடும்பத்தாருக்கு 5 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்கப்படும் எனவும், அம்மாநில அரசு தெரிவித்து உள்ளது.