அயோத்தியில் அரசு ஒதுக்கிய 5 ஏக்கர் நிலத்தில், புதியதாக பிரம்மாண்டமாக மசூதி உருவாக்கப்பட உள்ளது. அதற்கான மாதிரி வரைவுப்படங்கள் வெளியாகி உள்ளது.
இந்திய அளவில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய வழக்காக, பாபர் மசூதி இடிப்பு வழக்கு இருந்து வருகின்றது. அந்த வழக்கில் மசூதி கட்டுவதற்கு தனியாக 5 ஏக்கர் நிலத்தினை மாநில அரசு ஒதுக்க வேண்டும் எனவும், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது எனவும் கூறியது. அதனைத் தொடர்ந்து, இராமர் கோயில் கட்டுவதற்கானப் பணிகள் துவங்கியுள்ளன. இந்த சூழலில், அயோத்தியில் உள்ள தாணிபூர் கிராமத்தில், மசூதி கட்டுவதற்கான நிலமானது உத்திரப்பிரதேச அரசால், ஒதுக்கப்பட்டது.
அங்கு மசூதிக் கட்டுவதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது. அந்த மசூதியினைக் கட்டுவதற்குத் தேவையான மாதிரி வரைவுப்படமானது, இன்று வெளியிடப்பட்டது. இந்திய இஸ்லாமிக் கல்ச்சுரல் பவுன்டேஷன் கமிட்டியானது, இந்த வரைவுப்படத்தினை வெளியிட்டு உள்ளது. நேற்று வீடியோ கான்பிரன்சிங் மூலம், ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் எஸ்எம் அக்தர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இந்த வரைவுப் படமானது வெளியானது.
அதில், இந்த மசூதியானது முற்றிலும் சூரிய எரிசக்தியில் இயங்கக் கூடியதாக உருவாக்கப்பட உள்ளது. இதில், 200 பேர் தங்கி சிகிச்சைப் பெறுவதற்கான மருத்துவமனைகளும் கட்டப்பட உள்ளன. இந்த மசூதியில் ஒரே நேரத்தில் 2,000 பேர் தொழுகை நடத்துவதற்கான இட வசதியும் செய்யப்பட உள்ளன. இந்த மசூதியானது, எவ்வித மேற்கூரையும் இல்லாமல் முற்றிலும் முட்டை வடிவில் உருவாக்கப்பட உள்ளது. இந்த மசூதியானது, முற்றிலும் நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட உள்ளது.
இந்த கட்டுமானப் பணியானது ஜனவரி 26ம் தேதி அன்று தொடங்க இருக்கின்றது. இருப்பினும் இதற்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படலாம் எனவும், எனவே ஆகஸ்ட் 15ம் தேதி அன்று கட்டுமானப் பணியானது துவங்கும் எனவும் கூறப்பட்டு உள்ளது. அடிக்கல் நாட்டு விழாவிற்கு உத்திரப் பிரதேச முதல்வர் அழைக்கபடுவாரா என, செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்குப் பதிலளித்த ஐஐசிஎப் அமைப்பின் செயலாளர் அதார் ஹூசைன், இஸ்லாமிய முறையில் இந்தக் கட்டுமானமானது அமைய உள்ளது.
அதன் அடிக்கல் நாட்டு விழாவும் அவ்வாறே நடைபெற உள்ளது. அதனால், இஸ்லாமியக் கலாச்சாரப் படி, எவ்வித ஆடம்பரமும் இல்லாமல் இது துவங்கப்படும் என்றுக் கூறியுள்ளார். இங்கு கட்டப்படும் மருத்துவமனையானது, நான்கு மாடிகளைக் கொண்டதாக இருக்கும் என்றுக் கூறியுள்ளார்.