நைஜீரியாவில் உள்ள இராணுவத்தினைப் பழி வாங்கும் பொருட்டு, அங்குள்ள பள்ளியினைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்களை தீவிரவாதிகள் கடத்தியுள்ளனர்.
நைஜீரியா நாட்டில் அவ்வப்பொழுது, தீவிராதத் தாக்குதலுக்கு அங்குள்ளுப் பள்ளிகள் இரையாகின்றன. பல முறை இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ள போதிலும், இதனை அந்த அரசாங்கத்தால் தவிர்க்க முடியவில்லை. அங்குள்ள காட்சினா என்ற மாகாணத்தில் அமைந்துள்ள அரசு அறிவியல் பள்ளியில் இப்படி ஒரு சம்பவமானது தற்பொழுது அரங்கேறி உள்ளது.
அந்தப் பள்ளிக்கு அருகில் பாதுகாப்பு படையினர், தொடர்ந்து ரோந்து பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். அப்பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், கையில் வைத்திருந்த இயந்திரத் துப்பாக்கியால் சராமாரியாக சுட்டார். அப்பொழுது, அதற்கு அருகில் இருந்த பள்ளிகளில் இருந்த மாணவர்கள், அங்கிருந்த காடுகளுக்குள் சென்று ஒழிந்து கொண்டனர். அந்தப் பள்ளியில் மொத்தம் 839 மாணவர்கள் படித்து வந்தனர். அவர்களில் பலர் திரும்பி வந்துவிட்ட நிலையில், தற்பொழுது 350க்கும் அதிகமான மாணவர்களைக் காணவில்லை.
அவர்கள் காடுகளுக்குள் இன்னும் ஒழிந்து கொண்டு இருக்கின்றார்களா அல்லது தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு உள்ளார்களா எனத் தெரியவில்லை. தற்பொழுது நைஜீரிய இராணுவமும் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளது. இது குறித்து பேசிய பெற்றோர் ஒருவர், அரசாங்கத்தால் கண்டுபிடிக்க இயலவில்லை என்றால், எங்களால் என்ன செய்ய இயலும். அரசாங்கம் இதற்காக உதவ முன்வர வேண்டும் என்றுக் கூறியுள்ளார்.
அம்மாகாண ஆளுநர் கூறுகையில், காணாமல் போனக் குழந்தைகளைக் கண்டுபிடிப்பது சவாலான விஷயம் எனவும், இதற்காக இராணுவம் தற்பொழுது களமிறக்கப்பட்டு உள்ளது எனவும், நானும் பெற்றோர் என்ற முறையில், அந்தக் குழந்தைகளுக்காக இறைவனை வேண்டிக் கொள்கின்றேன் எனவும் கூறியுள்ளார். இது தற்பொழுது அந்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.