நாளையுடன் வடகிழக்குப் பருவமழையானது முடிவிற்கு வர உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக, தமிழகத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருகின்றது. பின் பனிக் காலத்தில் இவ்வாறான மழை பெய்வது, பருவ மாற்றத்தின் அறிகுறியாகவே பொதுமக்களாலும், இயற்கை ஆர்வலர்களாலும் பார்க்கப்படுகின்றது. இதனால், இந்த ஆண்டு இயற்கை சூழ்நிலை எப்படி இருக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. மார்கழி மற்றும் தை மாதத்தில் கடுமையான பனி பெய்யும் என்பது தான், ஆண்டாண்டு காலமாக மக்கள் காணும் விஷயமாகும்.
இந்த சூழலில், சென்னை உட்படப் பல மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகின்றது. இந்த மழை எப்பொழுது நிற்கும் என பலரும் கவலையுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த சூழலில், தென் அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது குமரியின் கடற்பகுதி வரை நீடித்து வருகின்றது எனவும், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வருகின்ற ஜனவரி 19ம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையானது, முடிவிற்கு வரும் எனவும், சென்னையில் மேகமூட்டம் காணப்படும் எனவும், தென்னக மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.