2011ல் ஐபோன் வாங்குவதற்காக தன்னுடைய கிட்னியினை விற்றவரின் உடல்நிலையானது, மோசமாகி உள்ளது.
உலகளவில் பிரசித்திப் பெற்ற ஒன்றாக இருக்கும் பொருளாகவும், பணக்காரர் என்றப் பெயருக்கு அடையாளமாகவும் இருப்பவைகளுள் முக்கியமானது ஐபோன். இந்த போனில் அப்படி என்ன இருக்கின்றது என, பலருக்கும் தெரியாமலேயே இதனை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். அதனை வாங்குவதற்காக நம்முடையக் கிட்னியினைத் தான் விற்க வேண்டும் என்று வேடிக்கையாகக் கூறி வந்தது வழக்கம். அது உண்மையாகவும் நடைபெற்றது.
சீனாவில் உள்ள அன்ஹூயி பகுதியில் வசித்து வந்தவர் வாங் சாங்கூன். இவர் 2011ம் ஆண்டில், புதிதாக வெளியாகி இருந்த ஐபோன் 2 மற்றும் ஐபோன் 4 ஆகியவைகளை வாங்குவதற்காக, தன்னுடைய வலது பக்க சிறுநீரகத்தினை விற்றார். ஆன்லைனில், தனியாக செய்த சேட் மூலம், அவருடையக் கிட்னியினை 3000 அமெரிக்க டாலருக்கு விற்று, அந்தப் பணத்தினை வைத்து ஐபோன் வாங்கினார்.
ஆனால், அவர் திருட்டுத்தனமாகவும், சட்ட விரோதமாகவும் இந்த அறுவை சிகிச்சையில் ஈடுபட்டு உள்ளார். இதனால், அவருடைய மற்றொரு கிட்னியும் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. தற்பொழுது 25 வயது நிரம்பியுள்ள வாங், உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கை ஆகிவிட்டார். அவருடைய மற்றொருக் கிட்னியும் மோசமான அறுவை சிகிச்சைக் காரணமாகவும், சரியான பராமரிப்பு இல்லாததாலும் செயலிழிந்தது. இதனால், தினமும் அவர் டயாலிசிஸ் செய்யும் நிலைக்கு அவர் சென்றுள்ளார்.