உலகிலேயே கெட்டுப் போகாதப் பொருளாக மதிக்கப்படுகின்ற தேனிலும் கலப்படம் செய்யப்பட்டு உள்ள அதிர்ச்சி தகவல், தற்பொழுது வெளியாகி உள்ளது.
இந்தியாவிற்குள் விற்கப்படும் தேனினை பெரிய அளவில் யாரும் பரிசோதனை செய்வது கிடையாது. உணவுத் தரக் கட்டுப்பாட்டு மையத்தின் தரமானது அந்த லட்சணத்தில் உள்ளது. இந்த சூழ்நிலையில், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேனிற்கு தரப் பரிசோதனையானது, அந்தந்த நாடுகளில் செய்யப்படுவது சாதாரண விஷயம் தான். அப்படி ஒரு சோதனையானது செய்யப்படுகின்றது.
ஜெர்மனியின் ஆய்வகம் ஒன்றில், மூலக்கூறு அடிப்படையிலான சோதனையானது செய்யப்பட்டது. அந்த சோதனையில் இந்தியாவின் 13 வகையான பிராண்ட் தேன்களை எடுத்து, பரிசோதனை செய்தனர். அந்தப் பரிசோதனையில் பல அதிர்ச்சிகரத் தகவல்கள் கசிந்துள்ளன. அதன்படி, இந்தியாவின் புகழ் பெற்ற பிராண்ட்களான டாபர், பதஞ்சலி, பைத்யநாத், ஜண்டு உள்ளிட்ட நிறுவனங்களின் தேன்களில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இந்தத் தேன்களில், சீனாவில் இருந்துப் பிரத்யேகமாக இறக்குமதி செய்யப்பட்ட வெல்லப் பாகானது கலக்கப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால், இந்தப் பொருட்களை ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பரிசோதனையில் தோல்வி ஏற்பட்டு உள்ளது. நாங்கள் பிராண்டடு பொருட்களை விற்கின்றோம் எனக் கூறிக் கொள்ளும் நிறுவனங்களே, இவ்வாறு திருட்டுத்தனம் செய்தால், எதைத் தான் பொதுமக்கள் நம்பி வாங்குவது?