கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் பொழுது, சமூக விரோதிகள் ஊடுறுவியுள்ளதாகக் கூறிய ரஜினியினை, விரைவில் விசாரணைக் கமிஷன் முன் ஆஜராக உத்தரவு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த 2018ம் ஆண்டு, தூத்துக்குடி மாவட்டதில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தினைக் கலைக்க, போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது பெரும் கலவரமாக மாறியது. இதனால், தூத்துகுடிக்குச் சென்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களைப் பார்த்து நலம் விசாரித்தார் ரஜினிகாந்த். அதன் பின்னர், செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் பேசினார்.
அவர் பேசுகையில், தொடர்ந்து போராட்டம் போராட்டம் என்றால் நாடே சுடுகாடாக மாறிவிடும் என்றுக் கூறினார். அதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுறுவியதாகவும் அதனாலேயே இவ்வாறு ஏற்பட்டு உள்ளது எனவும் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக, தனிநபர் விசாரணை ஆணையத்தினை, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தமிழக அரசு உருவாக்கியது. இந்த விசாரணை ஆணையத்தின் முன்பு, ரஜினிகாந்த் ஆஜராகி, எவ்வாறு சமூக விரோதிகள் ஊடுறுவியுள்ளனர் என பதிலளிக்க வேண்டும் என்றுக் கூறப்பட்டது.
அது குறித்த சம்மனும், ரஜினிகாந்திற்கு அனுப்பப்பட்டது. ஆனால், தான் தற்பொழுது சூட்டிங்கில் இருப்பதாகவும், அதனால் ஆஜராக முடியாது எனவும் அவர் கூறியிருந்தார். இந்த சூழலில், அவர் வருகின்ற ஜனவரி மாதம் ஆஜராக வேண்டும் என, விரைவில் சம்மன் அனுப்பப்படும் என, செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் இது குறித்து கூறுகையில், வருகின்ற ஜனவரி மாதம் ரஜினிகாந்த் சாட்சியாக அழைக்கப்படுவார் எனக் கூறியுள்ளார்.