அமெரிக்கத் தேர்தலில் அதிபராக உள்ள டொனால்ட் ட்ரம்பின் தோல்வியானது, உறுதியாகி விட்டது. அவருடன் போட்டியிட்ட ஜோ பிடன் வெற்றிக்குத் தேவையான 270 வாக்குகளைப் பெற்று, அதிபர் தேர்தலில் வெற்றியினை அடைந்துள்ளார்.
இந்தத் தேர்தலில் பிடனின் வெற்றிக்கான காரணங்களைப் பற்றியும், அவருடைய தந்திரத்தினைப் பற்றியும், அதே சமயம் டொனால்ட் ட்ரம்பின் தோல்வியினைப் பற்றியும் சற்று பார்ப்போம். ரிபப்ளிக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்பும், மைக் பென்சும் தொடர்ந்து கருப்பின மக்களுக்கு எதிராகவே பிரச்சாரங்களைச் செய்து வந்தனர். அத்துடன், நியூயார்க் நகரில் ஏற்பட்ட கருப்பின மக்களின் போராட்டத்தால், ட்ரம்பின் வாக்கு வங்கியானது கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
அத்துடன் அமெரிக்கா முழுவதும் பரவிய கொரோனா வைரஸானது, ட்ரம்பின் செல்வாக்கினை அசைத்துப் பார்த்துவிட்டது. தொடர்ந்து, வெள்ளை நிற மக்களை மட்டும் குறி வைத்து, வாக்கு சேகரித்த ட்ரம்பிற்கு மாபெரும் அடியாக இந்தத் தேர்தல் அமைந்ததற்கு முக்கியக் காரணமே, கருப்பின மக்களின் வாக்குகள் தான். இந்த சூழ்நிலையில், இவருக்கு எதிராகப் போட்டியிட்டவர்கள், அதனை அவர்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.
கடந்த ஆட்சியின் பொழுது, ஒபாமா எனும் கருப்பரும் ஜோ பிடன் என்னும் வெள்ளை நிற நபரும் டெமோக்ராட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதே ராஜதந்திரத்தினை இந்தத் தேர்தலிலும், ஜோ பிடன் பயன்படுத்தியிருக்கின்றார். வெள்ளை நிற மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு ஜோ பிடனும், கருப்பின மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு கமலா ஹாரீஸூம் அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிக்காக போட்டியிட்டனர்.
இந்த காம்பினேஷன் எப்பொழுதும் வெற்றிக்கான ஒன்றாக, தற்பொழுது வரை இருந்து வருகின்றது. ட்ரம்பின் ஆட்சியின் மீது விரக்தியில் இருந்து வந்த கருப்பின மக்கள், கமலா ஹாரீஸிற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால், ஜோ பிடனால் எளிதாக 270க்கும் அதிகமான இடங்களில் வெல்ல முடிந்தது. இனப் பாகுபாடு பார்க்கக் கூடாது எனக் கூறும் தலைவர்களே, இனப் பிரிவினைவாதத்தினைப் பயன்படுத்தி, இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கமலா ஹாரீஸை தமிழர் என, பலரும் இந்தியாவில் கொண்டாடி வருகின்றனர். ஆனால், அவரின் தாய் மட்டுமே இந்தியர் ஆவார். அவருடைய தந்தை ஜமைக்கா நாட்டினைச் சேர்ந்தவர். எப்பொழுதும் தந்தையின் இனம் மற்றும் மதமே, குழந்தைகளுக்கு வழங்கப்படுவது உலகளாவிய வழக்கம் ஆகும். அதனடிப்படையில் பார்க்கும் பொழுது, கமலா ஹாரீஸூம் கருப்பினப் பெண் தான். இது தெரியாமல், தமிழக மக்கள் அவரை தமிழர் எனக் கொண்டாடுவது வேடிக்கை கலந்த நகைப்பாகவே உள்ளது.