மணலை சூடாக்கினால் தங்கமாகும்! 50 லட்சம் அபேஸ்! போலீசார் வலை வீச்சு!

23 January 2021 அரசியல்
sandtogold.jpg

புனேவில் மணலை சூடாக்கினால் தங்கம் கிடைக்கும் என்று கூறி, 50 லட்சத்தினை அபேஸ் செய்த நபருக்கு, போலீசார் வலை விரித்துள்ளனர்.

புனே நகரில் நகைக் கடை வைத்திருக்கும் நபர் ஒருவருக்கு, புதிய நண்பர் ஒருவர் கடந்த ஆண்டு அறிமுகமாகி உள்ளார். அவர் நகைக்கடைக்காரருக்கும், அவருடைக் குடும்பத்தாருக்கும் பலவித உதவிகளை செய்துள்ளார். உணவு பொருட்கள், காய்கறிகள், பால் என பலவித பொருட்களை வாங்கித் தந்து அவர்களுடைய நம்பிக்கையினைப் பெற்றுள்ளார்.

பின்னர், அவரும் அவருடைய நண்பரும் சேர்ந்து அந்த நகைக் கடைக்காரரிடம் ஒரு இரகசியத்தினைக் கூறியுள்ளனர். அதாவது, தங்களிடம் 4 கிலோ மணல் இருப்பதாகவும், அது வங்காளத்திலிருந்து பெற்றதாகவும், அதனை எரித்தால் தங்கமாக மாறிவிடும் எனவும் கூறியுள்ளனர். ஒரு கட்டத்தில், அதனை நம்பிய நகைக் கடைக்காரர் அந்த நான்குக் கிலோ மணலை 49.92 லட்சத்திற்கு வாங்கியுள்ளார்.

இரவில், யாருடைய நடமாட்டமும் இருக்காது என்பதால், அந்த மணலை எரித்துப் பார்த்துள்ளார். தங்கம் வரும் எனக் காத்திருந்த அந்த நபருக்கு, ஏமாற்றமே வந்துள்ளது. தங்கம் வரவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டுள்ளதை அறிந்த அந்தக் கடைக்காரர், மணலை விற்றவர்கள் மீது போலீசில் புகார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் 420 உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

HOT NEWS