சவுக்கார்பேட்டையில் நடைபெற்ற மூவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள வழக்கில், துப்பாக்கிக் கொடுத்து உதவியதாக முன்னாள் இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டு உள்ளார்.
சவுக்கார் பேட்டையில் வசித்து வந்த தாலில் சந்த், அவருடைய மனைவி புஷ்பா பாய் மற்றும் அவருடைய மகன் ஸ்ரீசந்த்தல் ஆகியோர் மர்மான முறையில், வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டு கிடந்தனர். அவர்களுடைய உடலினைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனை செய்தனர். அங்கிருந்த சிசிடிவிக் காட்சிகளை ஆய்வு செய்ததில், ஸ்ரீசந்த்தல் விவாகரத்து செய்ய உள்ள அவருடைய மனைவியும், அவருடைய சகோதரர் உட்பட 3 பேர் இந்தக் கொலையினை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கொலையில் தொடர்புடையவர்களை, வெறும் 24 மணி நேரத்தில் தமிழக போலீசார் கைது செய்தனர். மேலும், அந்தக் கொலைக்கு மூளையாக செயல்பட்ட ஸ்ரீசந்த்தல் மனைவி ஜெயமாலாவிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதில், இந்தக் கொலையினை செய்வதற்காக முன்னாள் இராணுவ அதிகாரியிடம் இருந்து துப்பாக்கிப் பெற்றதாக, அவர் வாக்குமூலம் தந்தார்.
அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், 2 துப்பாக்கிகளைக் கொலைக்குப் பயன்படுத்தி உள்ளதாகவும், அதில் ஒரு துப்பாக்கியினை நட்பின் அடிப்படையில் ராஜஸ்தான் மாநிலத்தினைச் சேர்ந்த முன்னாள் இராணுவ அதிகாரி, ராஜூ துபே வழங்கி இருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, அவரைக் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.