அமெரிக்காவில் ஐபேட் வழியாக, சோனிக் பூம்ஸ் கேமிற்காக 11 லட்ச ரூபாயினை, சிறுவன் செலவிட்ட செய்தி தற்பொழுது காட்டுத் தீ போல பரவி வருகின்றது.
குழந்தைகள் தற்பொழுது சாலைகளிலும், விளையாட்டு மைதானங்களிலும் விளையாடாமல் ஆன்லைன் கேமிலேயே பொழுதினைக் கழித்து வருகின்றனர். அதில் பல விபரீதங்களும் நிகழ்வது தற்பொழுது வாடிக்கையாக மாறிவிட்டது. இந்தியாவில் பப்ஜி உள்ளிட்ட கேம்களைத் தடை செய்த போதிலும், பெரும்பாலான நாடுகளில் ஆன்லைன் கேம்களுக்கு அனுமதி உள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் ருசீகர சம்பவம் ஒன்று நடைபெற்று உள்ளது. ஜெசிகா ஜான்சான் என்பவர், கொரோனா பரவல் காரணமாக வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அலுவல் பணிகளைக் கவனித்து வந்தார். அவருக்கு ஆறாம் வகுப்புப் படிக்கின்ற மகன் இருக்கின்றான். வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம், படித்து வருகின்ற சிறுவன் ஆன்லைன் கேம்களை விளையாடி வருகின்றான். அந்த சிறுவனின் தாயின் ஆப்பிள் ஐபேடினை வைத்து, அதில் சோனிக் பூம் கேம் விளையாடி இருக்கின்றார்.
அந்த கேமில் வருகின்ற கதாபாத்திரங்களையும், பவர் அப்களையும் வாங்குவதற்காக முதலில் 2 லட்ச ரூபாயினை, செலவழித்து உள்ளான். இதனை, யாரும் கண்டுபிடிக்கவில்லை. சில நாட்களுக்குப் பிறகு, வங்கிக்குச் செல்கையில், கையிருப்பில் இருந்து 2 லட்ச ரூபாயானது காலியாகி இருந்ததைக் கண்டு, ஜெசிகா அதிர்ச்சி அடைந்தார். இதனைத் தொடர்ந்து வங்கியில் புகார் தெரிவித்து இருந்தார். ஆனால், அதற்குள் சிறுவன் அடுத்தடுத்து பல விஷயங்களை கேமில் வாங்கி, 11 லட்ச ரூபாயினை காலி செய்துவிட்டான்.
உங்கள் கணக்கில் இருந்து பேபால் மூலமாக, ஆப்பிள் ஸ்டோருக்கு பணம் சென்றுள்ளது என்றுக் கூறியது வங்கி. அதனைத் தொடர்ந்து, ஜெசிகா ஆப்பிளிடம் முறையிட்டு, பணத்தினைத் திருப்பி அளிக்கும் படி கெஞ்சியுள்ளார். ஆனால், பணத்தினைச் செலுத்தி 60 நாட்களுக்குள் கேட்டால் மட்டுமே பணம் திரும்பத் தரப்படும் எனவும், தற்பொழுது 60 நாட்களைக் கடந்து விட்டதால் திருப்பித் தர முடியாது என மறுத்துவிட்டது. இதனால், ஜெசிகாவிற்கு 11 லட்சம் தண்டமாக விரயமாகி உள்ளது. சிறுவர்களிடத்தில் மின்னணுப் பொருட்களை வழங்கும் பொழுது, இணையப் பணப் பரிமாற்றத்தினைக் கட் செய்துவிட்டு தருவது இப்படிப்பட்ட நஷ்டங்களில் இருந்து காக்கும்.