இந்தியாவின் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதில், வேதாந்தாவின் அனில் அகர்வால் மற்றும் அதானி இடையே, போட்டி நிலவி வருகின்றது.
இந்தியாவில் உள்ளப் பொதுத்துறை நிறுவனங்களை, மத்திய அரசானது தற்பொழுது தனியார் மயம் ஆக்கி வருகின்றது. அந்த வரிசையில் தற்பொழுது இடம் பெற்று இருப்பது பாரத் பெட்ரோலியம் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் 52.98% பங்குகளை விற்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனை வாங்குவதற்கு, இந்தியாவின் பல முன்னணி பணக்காரர்களும், பெரிய நிறுவனங்களும் விருப்பம் காட்டி வருகின்றன.
முதலில் இதனை வாங்குவதில், டாடா நிறுவனம் அதிக ஆர்வம் காட்டியதாகத் தகவல் வெளியானது. ஆனால், டாடா நிறுவனமோ, ஏர் இந்தியா திட்டத்தினைக் கைப்பற்றுவதில் அதிக ஆர்வம் காட்டுவதால், பிபிசிஎல் நிறுவனத்தினைக் கண்டு கொள்ளவில்லை. இதனால், இந்த நிறுவனத்தின் பங்குகளை விற்பதில், இழுபறி நீடித்தது. இந்நிலையில், எண்ணெய் மற்றும் கேஸ் வியாபாரத்தில் புகழ் பெற்ற வேதாந்தா குழுமமானது, பிபிசிஎல் நிறுவனத்தின் 52.98% பங்குகளை வாங்குவதில் மும்முரம் காட்டி வருகின்றது. அதானியின் குழுமமும் அதீத ஆர்வம் காட்டி வருகின்ற நிலையிலும் கூட, வேதாந்தா நிறுவனம் இந்த நிறுவனத்தினைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது.
இதற்காக ஜேபி மோர்கன் உள்ளிட்டப் பெரும் வங்கிகளிடம் கடன் கேட்டுப் பேசி வருகின்றது. சுமார் எட்டு பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாகப் பெறுவதற்குப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும் பட்சத்தில், கட்டாயம் கடன் உதவியுடன் பிபிசில் நிறுவனத்தினை வேதாந்தா நிறுவனம் கைப்பற்றும் எனக் கூறப்படுகின்றது.