10 கோடி மாத்திரைகள் தயாரிக்க முடிவு! உயர்ந்த மருந்து நிறுவனத்தின் மதிப்பு!

09 April 2020 அரசியல்
hydroxychloroquine.jpg

இந்த மாதத்திற்குள் பத்து கோடி மாத்திரைகளை வழங்க உள்ளதாக, ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தினைத் தயாரிக்கும் நிறுவனங்கள் கூறியுள்ளன.

உலகளவில் கொரோனா வைரஸால் 14 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், இந்த நோயினைக் கட்டுப்படுத்த்தும் முயற்சியில், பல நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன. இந்த நோய்க்கு தற்பொழுது ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரையானது பரிந்துரைக்கப்படுகின்றது.

இந்நிலையில், இந்த மருந்தினை அமெரிக்காவிற்கும் இந்திய அரசாங்கம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது. அவ்வாறு, வழங்காதபட்சத்தில் அதற்கான பதிலடியும் வழங்கப்படும் எனக் கூறியும் இருந்தது.

இதனை அடுத்து, நல்லெண்ணத்தின் அடிப்படையிலும், அவசரக் காலத்தினைக் கருத்தில் கொண்டும், இந்தியாவின் நேச நாடுகளுக்கு, இந்த மருந்தினை வழங்க இந்தியா முன் வந்துள்ளது. இது குறித்து, வெளியுறவுத் துறையும் அனுமதி வழங்கி உள்ளது. இதனால், இந்த மருந்தினை உலகளவில் அதிகமாகத் தயாரிக்கும் நிறுவனங்களான, ஐபிசிஏ லேபாரேட்டரிஸ் மற்றும் கேடில்லா ஹெல்த்கேர் நிறுவனங்களின், வர்த்தகப் பங்குமதிப்பானது உயர்ந்துள்ளது.

அந்த நிறுவனங்களின் ஒரு பங்கானது, 1,649 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில், ஐபிசிஏ நிறுவனத்தின் பங்கு மதிப்பானது 12 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கடந்த 52 வாரங்களில் இந்த அளவிற்கு உயர்ந்துள்ளது, இதுவே முதல்முறை. அதே போல், கேடில்லா ஹெல்த்கேர் நிறுவனத்தின் பங்கானது 13.6% அதிகரித்துள்ளது.

அந்த நிறுவனங்கள் கூறுகையில், இந்த ஏப்ரல் மாத இறுதியில் மொத்தமாக, பத்து கோடி மாத்திரைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். மாத்திரைகள் தயாரானதும், அவைகளை மத்திய அரசிடம் வழங்க முடிவு செய்துள்ளோம் என்றுக் கூறியுள்ளனர். தற்பொழுது இந்த மாத்திரைக்கு, மருத்துவ சந்தையில் கடும் கிராக்கி உள்ளதால், இதன் விலையானது உயரலாம் எனக் கூறப்படுகின்றது.

தற்பொழுது இந்தியாவில் 5000க்கும் அதிகமானோர், இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு நோயாளிக்கும் 14 மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு விசாரிக்கையில், ஐபிசிஏ நிறுவனத்தால் மட்டும், ஒரே மாதத்தில் 100 கோடி மாத்திரைகளை தயாரிக்க இயலும் என்றுக் கூறப்பட்டு உள்ளது. இந்த அளவே, இந்தியாவிற்கும், மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் போதுமானதாக இருக்கும் என்றுக் கூறப்படுகின்றது.

HOT NEWS