தப்லிக் ஜமாத்தில் கலந்து கொண்ட வெளிநாட்டினருக்கு 10 ஆண்டுகள் தடை!

05 June 2020 அரசியல்
amitshahspeech.jpg

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டினர், 10 ஆண்டுகள் இந்தியாவிற்குள் வரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த மார்ச் மாதம் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் பகுதியில் தப்லிக் ஜமாத் அமைப்பின் சார்பில் மத மாநாடு நடைபெற்றது. இதில் பல்வேறு நாட்டினைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் பல ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் பலருக்கும் கொரோனா வைரஸ் பரவி இருப்பது உறுதியாகி உள்ளது.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து வந்தவர்களில் பலரும் சுற்றுலா விசாக்களில் இந்தியாவிற்குள் வந்துள்ளனர். ஆனால், அவர்கள் அனைவரும் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்றுள்ளனர். மேலும், அவர்கள் மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கலந்து கொள்வதற்காக எவ்வித அனுமதியும் பெறவில்லை.

இந்த நிலையில், சுமார் 2200 பேர் இந்த தவறான செயலில் ஈடுபட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் கண்டுபிடித்துள்ளது. இவர்கள் அனைவரும், தங்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களைத் தவறாகப் பயன்படுத்தியதால், அவர்கள் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இந்தியாவிற்குள் நுழையத் தடை விதிக்க பரிந்துரை செய்தும் உள்ளது.

HOT NEWS