உத்திரப் பிரதேசத்திற்கு திரும்ப நினைக்கும் தொழிலாளர்களுக்காக 1000 பேருந்துகளை வழங்குவதாக, ப்ரியங்கா காந்தி அறிவித்து உள்ளார்.
மூன்று நாட்களுக்கு முன்பு, சுமார் 1049 பேருந்துகளை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு இயக்கி, அங்கு சிக்கித்தவிக்கும் உத்திரப்பிரதேசத்தினைச் சேர்ந்த தொழிலாளர்களை மீட்க உள்ளதாக அவர் அறிவித்தார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக, ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த சூழ்நிலையில், தொழிற்சாலைகளும், பல நிறுவனங்களும் தங்களுடைய நிறுவனங்களை மூடியுள்ளதால், வேலையில்லாத காரணத்தால் தங்களுடைய சொந்த ஊர்களுக்குத் திரும்ப ஆரம்பித்தனர் பொதுமக்கள். இருப்பினும், பொதுப் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டு உள்ளதால், டெல்லி உட்பட பல மாநிலங்களில் இருந்து, லட்சக்கணக்கான புலம்பெயரும் தொழிலாளர்கள், கால்நடையாகவே நடந்து, தங்களுடைய சொந்த ஊர்களுக்குத் திரும்புகின்றனர்.
அவர்களில் பலர் மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் நிலையினைக் கருத்தில் கொண்டு, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான ப்ரியங்கா காந்தி, அவர்களின் போக்குவரத்திற்காக சுமார் 1049 பேருந்துகளை இயக்க முன் வந்தார். ஆனால், அதற்கு உத்திரப் பிரதேச அரசு அனுமதி வழங்கவில்லை. இதனைத் தொடர்ந்து, அவர் சமூக வலைதளங்களின் மூலம், உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.
அதில், அந்தப் பேருந்துகளில் உங்களின் கட்சிக் கொடியினைக் கூடப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால், தயவு செய்து அந்த பேருந்துகளை அனுமதியுங்கள் எனக் கூறினார். அதனைத் தொடர்ந்து, இந்தியாவின் பலப் பகுதிகளுக்கு இந்தப் பேருந்துகள் அனுமதிக்கப்பட்டன. இருப்பினும், சுமார் 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளன.
இது குறித்து, விசாரிக்கையில் அந்த வாகனங்களின் உரிய ஆர்சி புக், இன்சுரன்ஸ், ஓட்டுநரின் மருத்துவச் சான்றிதழ் உள்ளிட்ட வசதிகள் சரியாக இல்லை எனவும், ஒரே எண்ணைப் பலப் பேருந்துகளுக்குப் பயன்படுத்தி உள்ளதாகவும் உத்திரப் பிரதேச அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் ப்ரியங்கா காந்தியின் உதவியாளர்.
அவர் பேசுகையில், முதலில் எங்களிடம் இந்த பேருந்துகள் குறித்துக் கடிதம் கேட்டனர். அதனை நாங்கள் சரியான நேரத்தில் அனுப்பிவிட்டோம். ஆனால், அரசாங்கமோ இழுத்தடிக்கின்றது. பின்னர், இவைகளில் பலவற்றில் உரிய ஆவணம் இல்லை எனக் கூறி நிறுத்தியுள்ளது. மேலும் பல மாநிலங்களில், மேலிடத்தில் இருந்து அனுமதி வரவில்லை எனவும் கூறி வருகின்றனர். தற்பொழுது வரை, 847 பேருந்துகளின் சரியானத் தகவல்கள் சமர்பிக்கப்பட்டு விட்டதாகவும், விரைவில் அனைத்து தகவல்களையும் சமர்பிப்போம் எனவும் கூறியுள்ளார்.