வரும் மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் அட்டையினை, பான் கார்டுடன் இணைக்காவிட்டால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்திய வருமான வரித்துறையானது, பான் கார்டு எனப்படும் வசதியினை அனைவருக்கும் வழங்கி வருகின்றது. இதன் மூலம், பணப் பரிமாற்றத்தினை எளிதாக அடையாளம் காண இயலும். இதனை வருகின்ற மார்ச் 31ம் தேதிக்குள், ஆதார் அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும் என, ஜனவரி மாதமே கூறியிருந்தது. இந்தியாவில் 50 கோடிக்கும் அதிகமான பான் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன.
அவைகளில், கிட்டத்தட்ட முக்கால்வாசி பேர் இன்னும் ஆதார் அடையாள அட்டையுடன் பான் கார்டினை இணைக்கவில்லை. இதனால், வருமான வரித்துறையின் முயற்சியானது, தோல்வியில் முடியும் என கூறப்பட்டது. அதனைத் தடுத்து நிறுத்த, தற்பொழுது புதிய அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி, இனி மார்ச் 31ம் தேதிக்குள் பான் கார்டினை ஆதாருடன் இணைக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த பான் கார்டினைப் பயன்படுத்த இயலாது.
மேலும், மார்ச் மாதத்திற்கு பிறகு ஆதாரினை இணைத்தால், மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி, செக்சன் 272பி வருமான வரித்துறை சட்டத்தின்படி, பயன்பாட்டில் இல்லாத பான்கார்டினைப் பயன்படுத்துவோருக்கு 10,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த பான்கார்டினை இணைக்காமல், புதிய வங்கிக்கணக்குகளைத் தொடங்குவது கண்டுபிடிக்கப்பட்டால், 50,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.