சீனாவில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் காரணமாக, உலகம் முழுவதும் எட்டு லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 35,000 பேர் இந்த வைரஸால் மரணமடைந்து உள்ளனர். நாளுக்கு நாள், இந்த நோய் தொற்றானது வேகமாகப் பரவி வருகின்றது.
இந்த வைரஸால், அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்நாடுகளில் தான், இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. ஸ்பெயின் நாட்டில் மட்டும் தற்பொழுது வரை, 8,900 பேர் மரணமடைந்துள்ளனர். 75,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதனை முன்னிட்டு, அவர்களுக்கு 15 டன் அளவுள்ள மருத்துவப் பொருட்களை, சீன அரசாங்கம் அனுப்பியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஸ்பெயின் பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்கரிட்டா ரோபில்ஸ், சீனாவிற்கு சென்று வந்த நம்முடைய ஏ400 என்ற விமானம், தற்பொழுது அங்கிருந்து 15 டன் அளவுள்ள மருத்துவப் பொருட்களை கொண்டு வந்துள்ளது.
விரைவில் அந்த மருத்துவ உபகரணங்களும், பொருட்களும் ஸ்பெயின் நாட்டின் தன்னாட்சித் தீவுகளுக்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதனால், அப்பகுதியில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு, இது பயனுள்ளதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.