சூடான் தீ விபத்து 18 இந்தியர்கள் பலி! 6 பேர் தமிழர்கள்!

05 December 2019 அரசியல்
sudanfire.jpg

சூடான் நாட்டில் உள்ள பகரியில், செராமிக்கா சலோமி என்ற டைல்ஸ் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 இந்தியர்கள் உட்பட, மொத்தம் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில், 6 பேர் தமிழகத்தினைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சிக் கலந்த தகவல் வெளியாகி உள்ளது.

சூடான் நாட்டின் தலைநகர் கர்த்தோம் நகரின் வடக்குப் பகுதியில் பகாரி என்ற இடம் உள்ளது. இங்கு செராமிக்க சலோமி என்ற நிறுவனம் இயங்கி வருகின்றது. இந்த நிறுவனத்தில் இருந்து, உலகம் முழுக்க டைல்ஸ் தயாரித்து விற்கப்படுகின்றது. இந்த நிறுவனத்தில், 60 இந்தியர்கள் பணியாற்றி வந்தனர்.

இதில் 53 பேர், தொழிற்சாலையின் அருகேயே தங்கியிருந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில், அங்கு டேங்கர் லாரியில் எரிவாயு கொண்டு வரப்பட்டது. அதனை இறக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக, எரிவாயுவில் தீப்பற்றியது. தீயினை அணைக்கும் முயற்சியில், தீயணைப்புத் துறையினரும், தொழிற்சாலை ஊழியர்களும் ஈடுபட்டனர்.

இருப்பினும், மளமளவென பரவியில் தீயில், நூற்றுக்கும் அதிகமானோர் சிக்கிக் கொண்டனர். இதில், 130 பேர் தீக்காயம் அடைந்தனர். 23 பேர் தீயில் சிக்கி உடல் கருகி, பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் ஆறு தமிழர்கள் உட்பட, மொத்தம் 18 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இதனை, இந்தியாவின் இணை அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்துள்ளார். மேலும், அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

HOT NEWS