கான்க்ரீட் டிரக்கில் இரகசிய பயணம்! தொழிலாளர்கள் சிக்கினர்!

03 May 2020 அரசியல்
coronatruck.jpg

மஹாராஷ்டிராவில் இருந்து, உத்திரப்பிரதேசத்திற்கு கான்க்ரீட் கலக்கும் டிரக்கில் பயணித்தவர்களை, போலீசார் பிடித்தனர்.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது, அமலில் உள்ளது. வருகின்ற மே-17ம் தேதி வரை, இந்த ஊரடங்கு உத்தரவானது, இந்தியா முழுவதும் பின்பற்றப்படுகின்றது. இதனால், பொதுமக்கள் வெளியில் அனாவசியமாக நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான, போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதனால், மற்ற வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள், தங்களுடைய சொந்த மாநிலங்களுக்குச் செல்ல இயலாமல், கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக, பலவித வழிகளிலும் எப்படியாவது, தங்களுடைய சொந்த மாநிலங்களுக்குச் செல்ல வேண்டும் என முயற்சித்து வருகின்றனர்.

பலரும் வாகனங்கள் கிடைக்காமல், பல நூறு கிலோமீட்டர்கள் நடந்தே, தங்களுடை சொந்த மாநிலங்களுக்கு வருகின்றனர். அவர்களுக்கு போதுமான வாகன வசதியினை எவ்வித மாநில அரசும் செய்து தரவில்லை. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில், மஹாராஷ்டிராவில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

மஹாராஷ்டிராவில் இருந்து, உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு செல்ல முயன்ற நபர்கள் 18 பேர், தங்களுடையப் பயணத்திற்காக கான்க்ரீட் டிரக்கினைப் பயன்படுத்தி உள்ளனர். அந்த டிரக்கிற்குள் யாருக்கும் தெரியாதபடி, அமர்ந்து பயணம் செந்து வந்துள்ளனர். அவ்வாறு பயணம் செய்த நிலையில், அந்த வாகனமானது, மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற வாகன சோதனையின் பொழுது மாட்டிக் கொண்டது.

அந்த வாகனத்தினை ஓட்டிய டிரைவர், முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தந்ததால், அந்த வாகனத்தில் போலீசார் சோதனை செய்தனர். அதில், அந்த டிரக்கின் கான்க்ரீட் கலக்கும் இயந்திரத்திற்குள் அமர்ந்து, 18 பேர் உத்திரப்பிரதேசத்தில் உள்ள லக்னோவிற்கு பயணித்துள்ளனர். இதனால், அவர்களை வெளியேற்றிய போலீசார் அவர்களை, தனியாக பேருந்தில் ஏற்றி அவர்கள் ஊருக்கு அனுப்பி வைத்தனர். அந்த டிரக் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம், தற்பொழுது அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS