18 மணி நேரப் போராட்டம்! கண்ணீருடன் பெற்றோர்! கவலையில் தமிழகம்!

26 October 2019 அரசியல்
savesurjith.jpg

தொடர்ந்து 18 மணி நேரமாக, மீட்புப் பணியினர் போராடி வரும் நிலையில், தற்பொழுது நெய்வேலி நிலக்கரி சுரங்க மீட்புக் குழுவும் திருச்சிக்கு விரைந்துள்ளது. மேலும், ஐஐடி குழுவினரும் இந்த மீட்புப் பணிக்காக விரைந்துள்ளது. மாநில பேரிடர் மீட்புக் குழு தற்பொழுது திருச்சியின் அருகே உள்ளது. அது மட்டுமின்றி, தேசியப் பேரிடர் மீட்புக் குழுவும் திருச்சிக்கு விரைந்துள்ளது. இன்று காலை 3.45 மணியளவில் தேசியப் பேரிடர் மீட்புக் குழுவிற்கு, தமிழக அரசுத் தகவல் அனுப்பியது.

நேற்று மாலை 5.40 மணியளவில், திருச்சி மணப்பாறை அருகில் உள்ள நடுகாட்டுப்பட்டியில், சுர்ஜித் என்ற குழந்தை 5 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்தது. இதனைத் தொடர்ந்து அக்குழந்தையின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் என, அனைவரும் போலீசாருக்குத் தகவல் கொடுத்ததும், உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர்.

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட அமைச்சர்கள் திரு. விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆழ்துளைக் கிணறு தோண்டுவதற்காக போடப்பட்ட போல் குழியினை சுற்றியிருந்த செடிகள் அப்புறப்படுத்தப்பட்டன. குழியினை நோக்கி விளக்குகளும் பொருத்தப்பட்டன. அப்பகுதிக்கு தீயணைப்புத் துறையினர், காவல் துறை, மணப்பாறை மருத்துவர்கள் என முழு அரசாங்கமும் இந்தக் குழந்தையை மீட்பதில், கவனம் செலுத்தியது.

மதுரையில் மணிகண்டன் என்பவர் கண்டுபிடித்த கருவிகளும் இதில் பயன்படுத்தப்பட்டன. முதலில் உள்ளே விழுந்த குழந்தையின் கைகளில் சுறுக்குக் கையிறினை மாட்டி வெளியே எடுக்க முயற்சிகள் நடைபெற்றன. இருப்பினும், முதல் முயற்சியில் ஒரு கையில் கயிறு மாட்டியது. மற்றொரு கையில் கயிறு மாட்டப்படவில்லை. இதனை அடுத்து, மீண்டும் இரண்டாவது கையிலும் கயிறு மாட்டப்பட்டது. இனி குழந்தையை எளிதாக வெளியில் எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் இருக்கும் பொழுது, துரதிர்ஷ்டவசமாக உள்ளே இருந்த மண்ணின் ஈரப்பதம் காரணமாகவும், ஒரு கையில் இருந்த கயிறு நழுவியதாலும், 26 அடி ஆழத்தில் இருந்த குழந்தை 70 அடிக்குச் சென்று விட்டது.

இதனால், அமைச்சர் உட்பட அனைவருமே கவலை அடைந்தனர். இதனால், இன்று காலை 3.40 மணி அளவில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவிற்குத் தகவல் அளிக்கப்பட்டது. இருப்பினும், அவர்கள் வரத் தாமதம் ஆகும் என்பதால், மற்றக் குழுக்கள் அனைத்தும் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே நாமக்கல்லில் இருந்து, ஐஐடி நிர்வாகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மீட்புக் குழுவானது வர வழைக்கப்பட்டது. அக்குழுவினர் வைத்திருந்த கருவிகளில், ஆக்சிஜன் சப்ளை, மைக் மற்றும் கேமிரா உள்ளிட்டவை உள்ளன. அவைகளை வைத்து, குழந்தைகளுடன் தொடர்ந்து உரையாடி வருகின்றனர். குழந்தையின் தாய் அந்தக் குழந்தையிடம், அழாத கண்ணு, அம்மா உண்ண எப்படியாவது வெளிய எடுத்துறேன் எனக் கூறினார். அதற்கு அக்குழந்தை சரிமா என்றதும், அந்தக் குழந்தையின் தாய் அழ ஆரம்பித்து விட்டார்.

அங்குப் போடப்பட்டுள்ள, ஆழ்துளைக் கிணற்றின் விட்டம் வெளியே ஆறு இன்ச் விட்டத்துடனும், வெளியே 4 இன்ச் விட்டத்துடனும் இருக்கும். ஆனால், நாமக்கல் குழுவினர் வைத்திருந்த கருவியானது 5 இன்ச் விட்டத்துடன் இருக்கும். இதனால், அந்தக் கருவியை வைத்து மீட்க முடியவில்லை.

தொடர்ந்து, மணிகண்டனின் குழுவானது, மூன்றாவது முறையாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. ஆனால், 70 அடிக்குள் சிக்கியுள்ள குழந்தையின் முகம் மற்றும் கைகளில் மண் விழுந்துள்ளதால், குழந்தையின் குரலை கேட்க முடியவில்லை என, அமைச்சர் விஜயபாஸ்கர் கவலைத் தெரிவித்தார். தொடர்ந்து, அந்தக் குழந்தையை மீட்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தப் பிரச்சனையை அடுத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள செயல்படாத மற்றும் மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளை மூட ஆட்சிகள் உத்தரவிட்டுள்ளனர்.

HOT NEWS