300க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள் டெல்லியில் குவிந்தன! எதிர்பார்ப்பை கிளப்பும் விவசாயிகள் பேரணி!

25 January 2021 அரசியல்
farmersprotestmarch.jpg

வருகின்ற ஜனவரி 26ம் தேதி அன்று டிராக்டர் பேரணி நடைபெற உள்ள நிலையில், அந்தப் பேரணியினை காட்டுவதற்காக, வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 360க்கும் அதிகமான டிவி சேனல்கள் டெல்லியில் குவிந்துள்ளன.

கடந்த 61 நாட்களாக, டெல்லியின் எல்லைப் பகுதிகளில் பல லட்சம் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கூறி, 75 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் போராடி வருகின்றனர். 11 முறை விவசாயிகள் சங்கத்தினரும், வேளாண் துறை அமைச்சரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த போதிலும், எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.

வருகின்ற ஜனவரி 26ம் தேதி அன்று, குடியரசுத் தின விழாவின் பொழுது, நாங்களும் எங்களுடைய போராட்டத்தினை உலகிற்கேத் தெரிவிக்கும் வகையில், டிராக்டர் பேரணி நடத்துவோம் என, விவசாயிகள் தெரிவித்தனர். இதற்காக சுமார் 2 லட்சம் டிராக்டர்களை பேரணியில் பயன்படுத்த உள்ளனர். இந்தப் பேரணியில் 10 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பங்கேற்பர் என தெரிகின்றது. வேளாண் துறை அமைச்சரோ, வருகின்ற ஆறு மாதம் முதல் ஒன்றரை ஆண்டுகளுக்கு எங்களுடைய வேளாண் சட்டத்தினை ஒத்தி வைப்பதாக தெரிவித்தார்.

ஆனால், அதனை விவசாயிகள் ஏற்கவே இல்லை. இதனை முன்னிட்டு, குடியரசுத் தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடைபெற இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த பேரணியில் ஒவ்வொரு மாநிலத்தின் பெருமைகளை நினைவுப்படுத்தும் வகையில், விதவிதமான சிலைகளும் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த போராட்டமானது உலகளவில் கவனத்தினை ஈர்த்து உள்ளது. இந்த போராட்டத்தினையும், டிராக்டர் பேரணியினையும் செய்தியாக தொகுப்பதற்காக, உலகம் முழுவதில் இருந்தும் சுமார் 360க்கும் அதிகமான டிவி சேனல்கள் டெல்லிக்கு படையெடுத்து உள்ளன.

உலகிலேயே இவ்வளவு பெரிய விவசாயிகள் போராட்டமானது நடைபெறுவது, இதுவே முதல் முறை. இதன் காரணமாக, இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தப் போராட்டத்தினை விட்டுக் கொடுக்க எந்த டிவி சேனல் நிறுவனமும் தயாராக இல்லை. டிஸ்கவரி சேனல் முதல் உலகின் பல டிவி சேனல்களும் இந்த நிகழ்வினைக் காட்சியாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

HOT NEWS