47,000 ஹெக்டேர் நிலம் நாசம்! மஹாராஷ்டிராவிற்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள்!

29 May 2020 அரசியல்
locustjaipur.jpg

பாகிஸ்தான் வழியாக இந்தியாவின் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்குள் நுழைந்த ஆப்பிரிக்க பாலைவன வெட்டுக்கிளிகள் தற்பொழுது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்குள் நுழைந்துள்ளன.

இந்தியாவில் தற்பொழுது ஊரடங்கு உத்தரவானது, அமலில் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் மாபெரும் தலைவலியாக, இந்தப் பாலைவன வெட்டுக்கிளிகள் அமைந்துள்ளன. ராஜஸ்தானில் தொடங்கிய இந்த வெட்டுக்கிளிகளின் தொல்லையானது, குஜராத், உத்திரகாண்ட், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு வெகு வேகமாகப் பரவியுள்ளது. ஒரு மணி நேரத்தில், 35,000 மனிதர்களின் உணவினை அரைத்து தள்ளும் வெட்டுக்கிளிகள், மரங்கள், செடிகள், விளைநிலங்கள் என எதையும் விட்டு வைக்கவில்லை.

இந்த வெட்டுக்கிளிகளானது, தற்பொழுது மஹாராஷ்டிராவில் நுழைந்துள்ளது. இந்த வெட்டுக்கிளிகளை கவனிப்பதற்கு, தற்பொழுது ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சுமார், 47,000 ஹெக்டேர் நிலங்கள் இந்த வெட்டுக்கிளிகளால் பாதிக்கப்பட்டு உள்ளன. மொத்தமாக, இந்தியாவின் 303 இடங்களில் இந்த வெட்டுக்கிளிகள் பரவி உள்ளன.

ராஜஸ்தான் மாநிலத்தின் 20 மாவட்டங்களிலும், குஜராத்தின் 2 மாவட்டங்களிலும், மத்தியப் பிரதேசத்தின் ஒன்பது மாவட்டங்களிலும், உத்திரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் தலா ஒரு மாவட்டத்திலும் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த வெட்டுக்கிளிகளை சமாளிக்க, இந்தியாவின் வெட்டுக்கிளி கண்காணிக்கும் அமைப்பானது, 11 கட்டுப்பாட்டு மையங்களை உருவாக்கி உள்ளது.

இவைகள் மூலம், அந்த பூச்சிகள் மீது கிருமி நாசினை, பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டு உள்ளன. இந்த வெட்டுக்கிளிகள் ஒரு நாளைக்கு 50 முதல் 100 கிலோ மீட்டருக்கு சாதாரணமாக பயணம் செய்யக் கூடியவை எனக் கணக்கிடப்பட்டு உள்ளது. பெரிய வெட்டுகிளிகளின் எண்ணிக்கை மட்டும் எப்படியும் நான்கு முதல் எட்டு கோடி இருக்கும் எனவும், இவைகள் ஒரு நாளைக்கு 130 முதல் 150 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் எனவும் கூறப்படுகின்றது.

HOT NEWS