இந்தியாவில் முதல் 2 நாட்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 2 லட்சம் பேர் எனவும், அதில் 447 பேருக்கு மட்டுமே பக்க விளைவுகள் ஏற்பட்டு உள்ளன எனவும், மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
கடந்த ஜனவரி 16ம் தேதி முதல், இந்தியாவில் கொரோனா தடுப்பூசியானது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனை பாரதப் பிரதமர் மோடி ஆரம்பித்து வைத்தார். இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கோவிசீல்டு மற்றும் கோவாக்ஸின் மருந்துகள் தற்பொழுது அவசரப் பயன்பாட்டிற்காக அனுமதிக்கப்பட்டு உள்ளது. இந்த மருந்தானது தற்பொழுது முதல்நிலை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த மருந்தினை தற்பொழுது வரை 2,24,301 நபர்களுக்கு செலுத்தியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மனோகர் அக்னானி தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், தற்பொழுது வரை இந்தியா முழுவதும் சுமார் 2,24,301 நபர்களுக்கு, இந்த தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தியுள்ளதாகவும், அதில் வெறும் 447 நபர்களுக்கு மட்டுமே ஒவ்வாமை எனும் பக்க விளைவுகள் ஏற்பட்டு உள்ளன என்றும் தெரிவித்து உள்ளார்.
பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டவர்களில் 3 பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் எனவும் கூறியுள்ளார். வாந்தி, குமட்டல், தலைவலி, சிறிய அளவிலான காய்ச்சல் உள்ளிட்டவைகள் தான் பக்க விளைவுகளாக ஏற்பட்டு இருக்கின்றன எனவும் தெரிவித்து உள்ளார்.