போலி இ-பாஸ் தயாரித்து விற்பனை! சென்னையில் 5 பேர் கைது!

25 June 2020 அரசியல்
tnepass.jpg

சென்னையில் போலியாக இ-பாஸினை தயாரித்து விநியோகம் செய்த குற்றச்சாட்டில், 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதனால், சென்னை உட்படப் பல மாவட்டங்களில் முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, சென்னையில் உள்ள மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்து உள்ளனர்.

பலரும் செல்ல ஆரம்பித்துள்ள நிலையில், வெளி மாவட்டங்களுக்குச் செல்ல இ-பாஸ் கட்டாயம் வாங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, ஆன்லைனில் இ-பாஸிற்கு பல லட்சம் பேர் விண்ணப்பம் செய்தனர். இதில் பலருக்கும் தகுந்த காரணம் இல்லாமல் விண்ணப்பித்த காரணத்தால், இபாஸ் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், அண்ணாசாலையைச் சேர்ந்தவர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்தார். அதில், இபாஸினை போலீயாகத் தயாரித்து, அதனை 2000 ரூபாய்க்கு விற்று வருவதாகக் கூறினார். இதனையடுத்து, போலீசார் கடுமையான சோதனையில் ஈடுபட்டனர். மேலும், போலி இபாஸ் தயாரித்தால் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்கப்படும் என்றுக் கூறினார்.

இந்த சூழ்நிலையில், சென்னையில் மொத்தம் ஐந்து பேரினை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள், போலீயாக இபாஸ் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது. அவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைத்தனர்.

HOT NEWS