விஷ சாராயம் குடித்து 728 பேர் பலி! ஈரானில் கொடூரம்!

29 April 2020 அரசியல்
iran.jpg

ஈரான் நாட்டில், விஷ சாராயத்தினைக் குடித்து, 728 பேர் பலியாகி இருப்பது அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது பரவி உள்ளது. ஈரான் நாட்டில் இந்த வைரஸால், 92,584 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வைரஸ் தொற்றில் இருந்து 72,439 பேர் குணமாகி உள்ளனர். 5,877 பேர் துரதிர்ஷ்டவசமாக மரணமடைந்து உள்ளனர்.

இந்நிலையில், இந்த கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்க, சாராயம் குடிக்கலாம் என்றப் புரளி பரவியது. சாராயம் குடித்தால், இந்த கொரோனா வைரஸ் தாக்காது என்றப் புரளியால் பலரும் சாராயம் குடிக்க முடிவு செய்தனர். ஆனால், சாதாரண சாராயத்தினைக் குடிக்காமல், விஷத் தன்மையுள்ள மெத்தனாலைக் குடித்துள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த மெத்தனாலைக் குடித்தால், கண்பார்வை இழப்பு, மரணம், உடல்நலக் கோளாறு உள்ளிட்டப் பாதிப்புகள் ஏற்படும். இந்த விஷத் தன்மையுள்ள மெத்தனாலைக் குடித்த காரணத்தால், தற்பொழுது வரை 728 பேர் பலியாகி உள்ளதாக, ஈரான் சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். மேலும், அங்குள்ள மருத்துவமனைகளில், 5000க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 1000க் கணக்கானோர், கண்பார்வையை இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தற்பொழுது ஈரான் நாட்டில் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, பொருளாதாரத் தடையால் கடும் அவதிப்படும் ஈரான் அரசாங்கத்திற்கு, இந்த விஷ சாராயப் பிரச்சனையானது கடும் தலைவலியாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு, வெறும் 66 பேர் மட்டுமே இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS