கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், நாட்டின் 74வது சுதந்திர தினமான இன்று, டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர்ம மோடி கொடியேற்றினார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது, நாளுக்கு நாள் பரவிய வண்ணம் உள்ளது. இந்த சூழ்நிலையில், இன்று பாரத நாட்டின் 74வது சுதந்திர தின விழா, கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதற்காக, வழக்கம் போல் அல்லாமல், சமூக இடைவெளியினைப் பின்பற்றி, டெல்லியில் உள்ள செங்கோட்டையில் சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
பிரதமர் மோடி, கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டார். பின்னர், விழாவில் அவர் பேசுகையில், கொரோனா வைரஸினைத் தடுப்பதற்கு, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே வரி என்றத் திட்டங்களால் இந்தியா பல விதத்தில் முன்னேற்றம் அடைந்து வருகின்றது. இன்று உலக நாடுகள், நம் நாட்டினை நம்பிக்கையுடன் பார்க்கின்றன.
நமது கலாச்சாரம், பண்பாட்டிற்கு மிகப் பெரிய வரலாறு உண்டு. மக்கள் அனைவரும் அவர்களுடைய மனதில் ஒரு உறுதியினைக் கொள்ள வேண்டும். அது என்னவென்றால், உள்நாட்டு பொருட்கள் மற்றும் உள்நாட்டு முன்னேற்றம் ஆகியவை ஆகும். அடுத்த 2 ஆண்டுகளுக்குள் எவ்வாறு நாம் முன்னேற வேண்டும் என, அனைவரும் உறுதியேற்க வேண்டும். உள்ளூர் தயாரிப்புகளுக்கு குரல் கொடுப்போம் என்பதே, இனி நாம் உச்சரிக்க வேண்டிய தாரக மந்திரம் ஆகும்.
வங்கிகளை ஒருங்கிணைப்பதன் மூலம், விவசாயிகளுக்கான கடன்களை எளிதாக வழங்க இயலும். அடுத்து வரும் காலங்களில் இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 1.10 லட்சம் ஒதுக்கப்படுகின்றது என்றுக் கூறினார்.