சீனாவினை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, தற்பொழுது வரை சுமார், 950 பேர் பலியாகி இருக்கின்றனர். மேலும், இந்த வைரஸ் பாதிப்பு உள்ளவர்களாக 40,000 கண்டறியப்பட்டு உள்ளனர்.
சீனாவில் உள்ள மருத்துவமனைகளில், இடப்பற்றாக்குறை மற்றும் மருத்துவ வசதிப் பற்றாக்குறை காணமாக, என்ன செய்வதென்று தெரியாமல் மருத்துவர்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர். மருத்துவமனைகளில், நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகின்றது. இதனால், 24 மணி நேரமும், மருத்துவமனைகளில், சுழற்சி முறையில் மருத்துவர்கள் வேலை செய்கின்றனர். மருத்தவமனைகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு, விடுமுறை மறுக்கப்பட்டு உள்ளது.
மேலும், கூட்ட நெரிசலை சமாளிக்கும் விதமாக, தற்பொழுது ரோபோக்களும் இந்த மருத்துவமனைகளில் பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சார்ஸ் நோய் மூலம், 740 பேர் பலியான நிலையில், அறுபது நாட்களுக்குள் இந்த கொரோனா வைரஸ் காரணமாக, 950 பேர் பலியாகி இருப்பது வருத்தம் அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகின்றது. இந்த வைரஸ் பாதிப்பினால், சீனாவின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.
தற்காலிகமாக உருவாக்கப்பட்ட மருத்துவமனைகளும், மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகின்றன. பல இடங்களில், மக்கள் கூட்டமாக நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த இடமான, ஹூபெய் மாகாணம் தற்பொழுது இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.