அவெஞ்சர்ஸ் வெளியாக ஆரம்பித்ததில் இருந்து, டிசி ரசிகர்கள் காணாமலேயே போய்விட்டனர் எனலாம். அந்த அளவிற்கு, காட்சிக்குக் காட்சி சிஜி தொழில்நுட்பம் மூலம், பிரம்மாண்டத்தை அள்ளித் தெளித்து பாக்ஸ் ஆபிசில் கல்லா கட்டியது மார்வெல். ஆனால், கதை என்று பார்த்தால், வழக்கம் போலத் தான். ஆதி காலத்து அலாவுதீன் பூதம் கதைகளாகத் தான் இருக்கும். ஆனாலும், அதனை நம் மக்கள் ரசித்து தான் வந்தனர்.
ஆனால், டிசி உருவாக்கும் படம் அப்படி இருக்காது. கிணற்றில் போட்டக் கல்லைப் போல கடுமையாக இருக்கும். வலியுள்ளதாக இருக்கும். ஆனால், அதுவும் சூப்பர் ஹீரோ படங்களாகவே இருக்கும். இதற்கு பேட் மேன் தி டார்க் நைட் திரைப்படம் ஒரு உதாரணம்.
அந்தப் படத்தில் உலகப் புகழ் பெற்ற கிறிஸ்டியன் பேல், பேட்மேனாக நடித்து அசத்தியிருப்பார். அப்படியொரு பேட்மேனைப் பார்ப்பது அதிசயம் தான். ஆனால், அவரை உலகம் புகழ மறந்தது. அதற்கு முக்கியக் காரணம், அப்படத்தின் வில்லன் கதாப்பாத்திரம். ஜோக்கர் கதாப்பாத்திரத்தை விரும்பாத திரைப்பட ரசிகர்களும் கிடையாது, திரைவிமர்சகர்களும் கிடையாது. அந்த அளவிற்கு, ஒவ்வொரு வினாடியையும், இயக்குநர் செதுக்கியிருப்பார். ஹீத் லெட்ஜர் தான் அப்படத்தில், ஜோக்கர் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
அந்தக் கதாப்பாத்திரத்தில் நடித்ததற்காக, ஆஸ்கார் விருது கிடைத்து என்றால், அந்தக் கதாப்பாத்திரத்தின் வலிமையை நீங்களே உணரலாம். அதன் பின்னர், லேப்டாப் வால்பேப்பர் முதல் செல்போன் கவர் வரை, அந்த ஜோக்கர் கதாப்பாத்திரம் நீக்க முடியாத இடத்தினை, பிடித்துவிட்டது.
அதன் பின்னர், சூசைட் ஸ்குவாட் திரைப்படத்தில் மீண்டும் ஜோக்கர் கதாப்பாத்திரத்தினை ஞாபகப்படுத்தியது டிசி. இந்நிலையில், அந்த ஜோக்கரை மையமாகக் கொண்டு, ஒருப் படத்தினை முழுமையாக உருவாக்கி, திரைக்குக் கொண்டு வரும் முன்னரே, பல சர்வதேச திரைவிழாக்களில் அப்படத்தினை திரையிட்டனர்.
வெனிஸ் பிலிம் பெஸ்டிவல்லில் இந்தப் படத்தினைப் பார்த்த மக்கள், சுமார் 8 நிமிடம் எழுந்து நின்று கைதட்டி வாழ்த்தினர். உலகின் பிரபலமான பத்திரிக்கைகள், இப்படத்திற்கு சுமார் 5க்கு 5 என்ற ரேட்டிங் வழங்கி, கௌரவித்தது.
அப்படிப்பட்ட படம் தான், நேற்று உலகளவில் வெளியானது. ஒரு சிறு அட்டையைக் கையில் வைத்துக் கொண்டு ரோட்டில் நின்று வேலைப் பார்க்கின்றார். உலகமே அவரை அடிக்கின்றது. அழ வைக்கின்றது. மிரட்டுகின்றது. அப்படிப்பட்ட மனிதருக்கு ஒரு தாய். அதுவும், நோயால் பாதிக்கப்பட்ட தாய். அவருக்காக, சம்பாதிக்க வேண்டும் என ஏங்கும் மனிதாக ஆர்தர். அவர் வரும் ஒவ்வொரு காட்சிகளும், நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கின்றன.
அவருக்கு கோபம் வரும் பொழுது, சிரிக்கும் வினோதமான நோய் உண்டு. இதனால், அவரை யாராவது திட்டினால், கோபப்பட்டு சிரித்துவிடுவார். இதானல், அவர்கள் மேலும் கோபப்பட்டு இவரை அடித்துவிடுவர். அதனையும் வாங்கிக் கொண்டு, வலியாலும், கோபத்தாலும் சிரிப்பார். திரையறங்கில் உள்ள அனைவருமே விசிலடித்து ரசிக்கின்றனர். ஒரு கட்டத்தில் காலம் துரத்துகின்றது. பசி, வறுமை, கொடுமை, வலி, இழப்புகள், ஏமாற்றம் என அனைத்துமே அவருக்கு பாதகமாக இருக்கின்றது. இது அவருடைய மனநிலையை முற்றிலுமாக மாற்றுகின்றது.
அப்பொழுது, ஆர்தருக்குள் ஒருவன் உருவாகின்றான். அவன் கண்டிப்பாக, ஹீரோ அல்ல. உலகையே அச்சுறுத்தும் வில்லன். அவனைப் போல, இனி யாராலும் அடுத்தவர்களுக்கு சிரித்துக் கொண்டே வலியைத் தர இயலாது. அந்த அளவிற்குக் கொடுமையான வில்லன் பிறக்கின்றான், அவன் தான் ஜோக்கர்.
இப்படியொரு படத்தினைப் பார்க்காமல் இருந்தால், நீங்கள் சினிமா பிரியர் என்றுக் கூறுவதில் அர்த்தமில்லை. இந்தப் படம் தற்பொழுது, ஆஸ்கார் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றால், நீங்களேப் பார்த்துக் கொள்ளுங்கள். பொதுவாக, அனைவரும் பார்க்கும் விதத்தில் இருந்தால் தான், குடும்பத்துடன் திரையறங்கிற்குச் சென்று படம் பார்ப்பர்.
ஆனால், இப்படத்தில் உள்ள அதிக வன்முறைக் காட்சிகளின் காரணமாக, இதற்கு ஆர் ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், இப்படத்தினை, ஜோக்கர் முகமுடி அணிந்து கொண்டு, திரையறங்கிற்கு வந்து பார்க்கின்றனர். இது தான் இப்படத்தின் மாபெரும் வெற்றி.