டெல்லியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியானது ஆட்சியினைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. அந்தக் கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராகின்றார்.
கடந்த மாதம் எட்டாம் தேதி அன்று, டெல்லியில் உள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கு, சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியோர், மும்முனைப் போட்டியாளர்களாக களமிறங்கினர். பிரதமர் மோடி, அமித் ஷா, உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பாஜகவிற்காக வாக்கு சேகரித்தனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்காக, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர்.
ஆம் ஆத்மி கட்சியானது, மாநிலக் கட்சி என்பதால் வீடு வீடாக சென்று, அரவிந்த் கெஜ்ரிவாலும், அவருடைய ஆதரவாளர்களும் வாக்கு வேட்டை நடத்தினர். இந்நிலையில், நேற்று காலையில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தது. இதில், ஆம் ஆத்மி கட்சியானது, 62 இடங்களில் வென்று, ஆட்சியினைக் கைப்பற்றியது. எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியானது ஒரு இடத்தில் கூட வெல்ல இயலவில்லை. மத்தியில் ஆளும் பாஜக, எட்டு இடங்களில் வென்றது.
அதிகப்படியான இடங்களில் வென்றதால், ஆம் ஆத்மி கட்சியானது தன்னுடைய ஆட்சியினைத் தக்க வைத்துள்ளது. இதனையடுத்து, ஆம் ஆத்மி கட்சியினர், பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி, இந்த வெற்றியினைக் கொண்டாடி வருகின்றனர். விரைவில், தன்னுடைய முதல்வர் பதவியினை ராஜினாமா செய்யும் அரவிந்த் கெஜ்ரிவால், மீண்டும் முல்வராக விரைவில் பதவியேற்க உள்ளார்.