ஆனாலும், ஆம்பள படம் எடுத்தப் பிறகும், எப்படி இந்த மாதிரி படம் எடுக்க தைரியம் வந்ததுன்னு தெரியல. இப்படியொரு படத்தினை எடுத்து வைத்திருக்கின்றனர். படம் முழுக்க, பறத்தல், தாவுதல், குதித்தல், ஓடுதல், சண்டையிடுதல் என பக்கா ஆக்ஷன் படமாக உருவாகி இருக்கின்றது இந்த ஆக்ஷன் திரைப்படம்.
படத்தில் விஷால், தமன்னா, ராம்கி உட்பட பலர் நடித்திருக்கின்றனர். பொதுவாக, சுந்தர் சி படங்களில் லாஜிக் பார்க்கக் கூடாது. லாஜிக் பார்ப்பவர்கள், சுந்தர் சி படம் பார்க்கக் கூடாது என்பது சினிமா விதிகளில் ஒன்று. அப்படித் தான் இந்தப் படமும் உள்ளது. விஜயகாந்தினைத் தொடர்ந்து, தற்பொழுது விஷாலும் பாகிஸ்தான் தீவிரவாதிகளைத் தேடி செல்கின்றார் எதற்காகத் தெரியுமா?
தன்னுடைய அரசியல் தந்தையின் கொலை, அண்ணன் தற்கொலை இவைகளோடு தன் உயிருக்குயிரான காதலியின் மரணம் ஆகியவைகள் ஒரே தருணத்தில் நடைபெறுகின்றன. தம்பி விஷாலுக்கு அண்ணன் ஏன் தற்கொலை செய்து கொண்டான், தந்தையைக் கொன்றவர் யார் மற்றும் காதலி எவ்வாறு மர்மமாக இறந்தால் எனத் தெரியவில்லை. இவைகளை விசாரிக்க ஆரம்பிக்கின்றார். அது கடைசியில், பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும், தீவிரவாதக் குழுவின் தலைவனிடம் அழைத்துச் செல்கின்றது.
இராணுவ மேஜராக நடித்திருக்கும் விஷாலுக்கு, இந்தக் கதாப்பாத்திரம் புதிதல்ல. நல்ல உயரம், கட்டான உடல்வாகு என விஷால் போலீஸ் மற்றும் இராணுவ கதாப்பாத்திரங்களுக்கு கச்சிதமாகத் தகுதியானவர் என்றால் அது மிகையாகாது. பெரிய அளவில் சிரிக்காத முகம், பரபரப்பான கண்கள் என படம் முழுக்க சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி அப்ளாஸ் அள்ளுகின்றார் நடிகர் விஷால். படத்தில், விஷாலுக்குத் துணையாக தமன்னாவும் ஆக்ஷன் காட்சிகளில் தெறிக்க விடுகின்றார். அவ்வப்போது, கிளாமரும் காட்டுகின்றார்.
படத்திற்காக, கொஞ்சமாவது மெனக்கெட்டு இசையமைத்து இருக்கலாம். ஆனால், சுத்தமாக எதையும் ரசிக்க முடியாத அளவிற்கு, இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. இனி மேலாவது சற்று சுதாரித்து இசையமைக்கலாம். படத்தின் பின்னணி இசை சற்று ஆறுதல் அளிக்கின்றது.
படம் பார்க்கச் செல்பவர்கள், கண்டிப்பாக லாஜிக் பார்க்கக் கூடாது. அப்படி லாஜிக் பார்ப்பவர்கள் இந்தப் படத்தினைப் பார்க்கக் கூடாது. இது இந்தப் படத்தின் மேஜிக். மொத்தத்தில் ஆக்ஷன் திரைப்படம், பக்கா ஆக்ஷன்.