தான் தங்கியிருந்த வீட்டினையே சூதாட்டக் கிளப்பாக மாற்றி, சீட்டு முதலிய சூதாட்டத்தில் ஈடுபட்ட நடிகர் சியாமினை போலீசார் கைது செய்தனர்.
நடிகர் சியாம், தமிழ் சினிமா உலகில் அனைவராலும் தெரிந்த நபராக இருந்தார். அவரைப் பலருக்கும் பிடிக்கும். குஷி படத்தில், சிறிய கதாப்பாத்திரத்தில் ஆரம்பித்த அவருடைய திரையுலகப் பயணமானது, தற்பொழுது கதாநாயகன் இடத்திற்கு கொண்டு சென்று உள்ளது. சமீபகாலமாக அவருக்கு திரைப்படங்கள் இல்லை. எனவே, அவர் பணத் தேவைகளில் சிக்கித் தவித்து வந்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டெர்லிங் சாலையில் அமைந்துள்ள, அடுக்குமாடிக் குடியிருப்பில் சியாம் வசித்து வந்தார். அவருக்குப் பல நண்பர்கள் உள்ளனர். அவருடைய வீட்டிற்குப் பலரும் வந்து செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தனர். இதனால், அப்பகுதியில் வசித்து வந்த மக்களுக்கு பெரும் தலைவலியாக இருந்துள்ளது. விடிய விடிய அவருடைய வீட்டில், பாடல்கள், கூத்து, கும்மாளமாக இருந்து வந்துள்ளன.
இந்த சூழ்நிலையில், சென்னைப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீசார் திடீரென்று அவருடைய வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அதில், அவருடைய வீட்டில், சூதாட்டம் நடைபெறுவது உறுதியானது. பிரபல ஹோட்டல் உரிமையாளர்கள், திரைப்படத் துறையினர், இயக்குநர்கள், தொழிலதிபர்கள், வழக்கறிஞர்கள், இன்சூரன்ஸ் அதிகாரிகள் எனப் பலரும் அங்கு இருந்துள்ளனர்.
இதனிடையே, சட்ட விரோதமாக சூதாட்டம் நடத்தி வந்த நடிகர் சியாமினைப் போலீசார் கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக, 13 பேரை நள்ளிரவில் போலீசார் கைது செய்தனர்.