நடிகர் சூரியிடம் நிலம் வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக, நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை உட்பட, 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2015ம் ஆண்டு வீர தீர சூரன் என்றப் படத்தில் நடிப்பதற்காக, நடிகர் சூரிக்கு 40 லட்ச ரூபாயானது சம்பளமாக பேசப்பட்டது. அந்தப் படத்தில் சூரியும் நடித்தார். ஆனால், தற்பொழுது வரை, அவருடைய சம்பளம் வழங்கப்படவில்லை. அதற்குப் பதிலாக நிலம் வாங்கித் தருகின்றோம் என, அப்படத்தின் தயாரிப்பாளரான அன்புவேல் ராஜன் தெரிவித்துள்ளார்.
இவருடன் இணைந்து நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான ரமேஷ் குட்வாலாவும் இணைந்து, கூடுதலாக 2 கோடியே 70 லட்ச ரூபாயினை வாங்கியிருக்கின்றனர். அப்பொழுது தான், பெரிய அளவில் இடம் வாங்க முடியும் என்றுக் கூறியுள்ளனர். அதனை நம்பி, நடிகர் சூரியும் பணம் வழங்கியிருக்கின்றார். தற்பொழுது வரை நிலத்தைக் கண்ணில் கூட காட்டவில்லை எனப் புலம்பியிருக்கின்றார்.
இதனைத் தொடர்ந்து, அவர் சென்னை அடையாறு காவல்நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நிலத்தை வழங்க வேண்டும் அல்லது பணத்தினை வழங்க வேண்டும் என, நடிகர் சூரி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.