நடிகர் விக்ரம், சினிமாவினை விட்டு விலகுவதாக தகவல்கள் பரவின. இதற்கு விளக்கம் அளித்து, விக்ரம் தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
1990ம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி என்றப் படத்தில், நடிகர் விக்ரம் அறிமுகமானார். அதற்கு முன்னர், டப்பிங் கலைஞராகப் பணியாற்றி வந்தார். அவருடைய தொடக்கக் காலத்தில் பெரிய அளவில் வெற்றிகரமானப் படங்களை அவரால் தர இயலவில்லை. பின்னர், பாலா இயக்கத்தில், 1999ம் ஆண்டு வெளியான சேது திரைப்படம், இவருக்கென தனி அடையாளத்தினைத் தந்தது.
அன்று முதல் தற்பொழுது வரை, நடிகர் விக்ரமினை சீயான் விக்ரம் என்றே அழைக்கின்றனர். பல வெற்றிப் படங்கள், பல தோல்விப் படங்கள் என அனைத்தையும் பார்த்த நடிகர் என விக்ரமினை சுருக்கமாகக் கூறலாம். இந்நிலையில், கடந்த ஆண்டு, நடிகர் விக்ரமின் மகன் நடித்த ஆதித்யா வர்மா திரைப்படம் வெளியானது. அந்தப் படம், பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
இதனால், அவருடைய மகனுடைய படங்களில் நடிகர் விக்ரம் கவனம் செலுத்த உள்ளார் என்றத் தகவல்கள் கசிந்தன. மேலும், இவர் இனிப் படங்களில் நடிக்கமாட்டார் எனவும் கூறப்பட்டன. இதற்கு மறுப்புத் தெரிவித்து, நடிகர் விக்ரம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
அதில், தற்பொழுது நடிகர் விக்ரம், கோப்ரா, பொன்னியின் செல்வன், மகாவீர் கர்ணா மற்றும் பெயரிடப்படாத படங்களில் நடித்துக் கொண்டு இருக்கின்றார். ரசிகர்கள் யாரும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கூறியுள்ளனர்.