துருவ் விக்ரமின் முதல் படம். பாலா கையிலெடுத்து, கிரிசாயா முடித்தப் படம் என்ற பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கிடையில், இந்த ஆதித்யா வர்மா வெளியாகி உள்ளது.
விக்ரம் எப்படி தன்னுடைய முதல் படத்திலேயே அப்ளாஸ் அள்ளினாரோ, அதே போல் துருவ் விக்ரமும் அள்ளுகின்றார். நல்ல வேளை பாலா படத்தினை வெளியிடவில்லை. ஒரு வேளை பாலா உருவாக்கியிருந்த ஆதித்யா வர்மா படத்தினை வெளியிட்டிருந்தால், துருவ்வின் கடைசிப் படமாகவே இது இருந்திருக்கும். தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக் தான் இந்த ஆதித்யா வர்மா. இந்தப் படம் ஹிந்தியில் கபார் சிங் என்ற பெயரில், வெளியாகி பாக்ஸ் ஆபிசில் கல்லா கட்டியது.
இந்தப் படத்திலும் வேறொன்றுமில்லை. காதல், மோதல், பிரிவு அடுத்தது என்ன இது தான் படத்தின் கதை. படத்தின் நாயகி, பனிதா சந்து மருத்துவம் படிக்கும் ஜூனியர் மாணவி. துருவ் விக்ரம் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர். இருவருக்கும் இடையில் காதல் பற்றிக் கொள்கிறது.
அந்தக் காதல் கட்டில் வரை சென்று விடுகின்றது. படிப்பு முடித்தப் பின், பனிதா சந்துவின் தந்தையிடம் சென்று பெண் கேட்கிறார். ஆனால், அவர் தந்தையோ, இவருடைய ஜாதியைக் காட்டி அவமானப்படுத்துகின்றார். பின்னர், பனிதா சந்துவினை வெறொருவருக்கு திருமணம் செய்து வைக்கின்றார். இதனால் மன விரக்தி அடையும் துருவ் அடுத்து என்ன ஆனார் என்பது தான் கதை.
படத்திற்கு செல்லும் முன், ஒரு விஷயத்தினை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இது பெரியவர்கள் மட்டுமே, பார்க்க வேண்டியப் படம். இன்னும் தெளிவாகச் சொன்னால் 18+ வயதுடையவர்கள் மட்டுமே, இப்படத்தினைப் பார்க்க இயலும். குடி போதை, காதல், லிப் டூ லிப் முத்தக் காட்சிகள், கட்டில் விளையாட்டுக்கள் என, படத்தில் அந்த வகையானக் காட்சிகள் மிக அதிகம். இதனால், இப்படத்தின் இமேஜ் பாதிக்கப்படலாம். மேலும், படத்தின் நேரத்தினைக் குறைத்தும் இருக்கலாம்.