காணொலி மூலம் அத்வானி பங்கேற்க அழைப்பு! 5ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை!

03 August 2020 அரசியல்
lkadvani.jpg

வருகின்ற ஆகஸ்ட் 5ம் தேதி அன்று, உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கானப் பூமி பூஜை நடைபெற உள்ளது. இதில் 170 பேர் பங்கேற்க உள்ளனர்.

கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் வெளியிட்டத் தீர்ப்பின்படி, அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், ராமர்கோயில் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. மேலும், அதற்காக அறக்கட்டளையினை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. அதன்படி, தற்பொழுது அறக்கட்டளை உருவாக்கப்பட்டு மும்முரமாக வேலைகள் நடைபெற்று வருகின்றன.

வருகின்ற ஆகஸ்ட் 5ம் தேதி அன்று, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையானது நடைபெற உள்ளது. இதில், பாரதப் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். சிறப்பு விருந்தினராக பாபா ராம்தேவ் கலந்து கொள்ள உள்ளார். இந்த நிகழ்ச்சியில் அமித் ஷா மற்றும் உத்திரப் பிரதேச மாநில பாஜக தலைவர் ஸ்வாதந்த்ர தேவ் உள்ளிட்டோர் கலந்து கொள்வதாக இருந்தது.

இந்த சூழலில், இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதால், அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமாட்டார்கள். மேலும், பாஜகவின் மூத்த தலைவரான எல்கே அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் டெல்லியில் இருந்த படி, இணைய வழியில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக, உத்திரப் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் குவிந்த வண்ணம் உள்ளனர்.

HOT NEWS