டொனால்ட் ட்ரம்பின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டக் காரணத்தால், டிவிட்டர் நிறுவனத்திற்கு 40,000 கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
உலகளவில் கடும் விவாதத்திற்கு உள்ளாகியிருக்கின்ற விஷயமாக, அமெரிக்க அதிபர் தேர்தல் இருந்து வருகின்றது. அதற்கு முழு முதற்காரணமும் அமெரிக்க அதிபராக இருந்து வருகின்ற டொனால்ட் ட்ரம்ப் தான். அவர் தற்பொழுது வரை, தான் தோற்றதை ஏற்கவே இல்லை. இந்த சூழலில், அமெரிக்காவின் காங்கிரஸ் அமைப்பானது கடந்த வாரம் ட்ரம்ப் ஆதரவாளர்களால் சூரையாடப்பட்டது. இதற்கு உலக நாடுகள் பலவும், தங்களுடையக் கண்டனத்தினைப் பதிவு செய்தனர்.
இந்தப் பரபரப்பிற்கு இடையில், தேர்தலில் வென்றுள்ள ஜோ பிடனுக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தொடர்ந்து அமெரிக்காவில் நிலவி வருகின்ற அசாதாரண சூழலுக்குக் காரணமாக இருப்பதாக, ட்ரம்ப் மீது புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது. அவரைப் பதவியில் இருந்து நீக்கவும், அந்நாட்டு சபாநாயகர் பரிந்துரைத்துள்ளார். இந்த நிலையில், தொடர்ந்து சமூக வலைதளமான டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்டவைகளில் கடுமையான தகவல்களை பதிவிடுவதாக ட்ரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் சட்டத்திற்குப் புரம்பாக செயல்பட்டதால், ட்ரம்பின் கணக்கினை தற்காலிகமாக முடக்கின சம்பந்தப்பட்ட நிறுவனங்கள். இந்த சூழலில், டிவிட்டர் நிறுவனமானது, டிரம்பின் கணக்கினை முற்றிலுமாக முடக்கியுள்ளது. இதனால், டிவிட்டர் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்புகள், சரிவினை சந்தித்து உள்ளன. தற்பொழுது டிவிட்டர் நிறுவனத்துக்கு சொந்தமான பங்குகள் 12% சரிவினை சந்தித்து உள்ளன. இதனால் அந்நிறுவனத்திற்கு 40,000 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ட்ரம்பின் அதிபர் பதவிக் காலம் முடியும் வரை, பேஸ்புக்கில் ட்ரம்பின் கணக்கு முடக்கப்பட்டே இருக்கும் என, மார்க் சூக்கர்பெர்க் தெரிவித்து உள்ளார். இது தற்பொழுது ட்ரம்பின் மீதான, வெறுப்பினையேக் காட்டும் விதமாக உள்ளது.