மதுரையை இரண்டாவது தலைநகராக்குங்கள் என ஆர்பி உதயகுமாரும், செல்லூர் ராஜூம் கூறினாலும் கூறினார்கள், தற்பொழுது திருச்சியில் இருந்து புதிய குரல் ஒன்று ஒலிக்கத் துவங்கி உள்ளது.
மதுரையினை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக்குவது குறித்து வருகின்ற ஆகஸ்ட் 21ம் தேதி அன்று, கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற உள்ளதாக, வருவாய்துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார். மேலும், இந்தக் கூட்டத்தில், தென் தமிழகத்தினைச் சேர்ந்த வணிகர்கள், வியாபாரிகள், தொழிலதிபர்கள், தொழில் வர்த்தக சங்கங்கள், குறிப்பாக, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளதாக அறிவித்து உள்ளார்.
ஏற்கனவே, கடந்த வாரம் தொடங்கி, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவும், வருவாய்துறை அமைச்சர் ஆர்பி உதயகுமாரும் மதுரையினை, தமிழகத்தின் 2வது தலைநகரமாக மாற்ற வேண்டும் என்றுக் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த சூழலில் திருச்சி மாவட்டத்தினை 2வது தலைநகராக அறிவிக்க வேண்டும் என அதிமுகவினர் கூறியுள்ளனர்.
திருச்சியினை 2வது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் விரும்பியதாகவும், அதனையே நாமும் நிறைவேற்ற வேண்டும் எனவும், திருச்சியினை தமிழகத்தின் 2வது தலைநகராக அறிவிக்க வேண்டும் என, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்து உள்ளார்.