பரிசு மழையில் நனைந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! கார்கள், பைக்குகள் பரிசு!

17 January 2020 அரசியல்
alanganallurajaycar.jpg

இன்று உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, சீரும் சிறப்புமாக நடைபெற்று முடிந்தது. இதில் மொத்தம் 739 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

இதில் 688 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். காலை 8 மணியளவில் ஆரம்பித்த இப்போட்டியானது, மாலை 5.45 மணியளவில் முடிவுக்கு வந்தது. மாலை ஆறு மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை ஆட்சியர் வினய் போட்டியினை முடித்து வைத்தார். அவருடன், தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதய்குமார், ஓபி ரவீந்திரநாத், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ மாணிக்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.

alanganallurbull.jpg

இந்தப் போட்டியில், அதிக காளைகள் அடக்கி முதல் இடம் பிடிப்பவருக்கு, முதலமைச்சர் சார்பில் காரும், இரண்டாம் இடம் பிடிப்பவருக்கு, துணை முதல்வர் சார்பில் காரும் பரிசாக அறிவிக்கப்பட்டன. மேலும், மோட்டார் சைக்கிள்கள், தங்க நாணயம், வெள்ளி நாணயம் உள்ளிட்டப் பரிசுப் பொருட்கள் அறிவிக்கப்பட்டன.

காலை முதல், ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளை என, பல காளைகள் களத்தில் நின்று கலக்கின. இந்நிலையில், காளை மாட்டினை அழைத்து வந்திருந்த ஒருவர், அவருடைய மாடு முட்டியதில், உயிரிழந்தார். மேலும் இருவர் உயிரிழந்தனர். இந்தப் போட்டியில், 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்தப் போட்டியில், அதிகபட்சமாக 16 காளைகளை அடக்கிய ரஞ்சித் குமாருக்கு, கார் பரிசு அளிக்கப்பட்டது. மேலும், இவர் ஒரே சுற்றில் 8 காளைகளை அடக்கி மாஸ் காட்டினார். மதுரை ஜெய்ஹிந்த்புரத்தினைச் சேர்ந்த கார்த்திக் இரண்டாவது இடம் பிடித்தார். இவர், 14 காளைகளைப் பிடித்தார். இவருக்கும் கார் பரிசாக வழங்கப்பட்டது.

பல பேர், 10 காளைகளைப் பிடித்து அசத்தினர். இவர்களுக்கு, அமைச்சர்கள் பரிசுகளை வழங்கி கௌரவித்தனர். காலை ஆரம்பித்ததில் இருந்து, தங்க நாணயம், வெள்ளி நாணயம், அண்டா, பரிசுப் பை, சைக்கிள், மோட்டார் சைக்கிள், டிராவல் பேக் உள்ளிட்ட பொருட்கள், பரிசுகளாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS