அமேசானைக் காபாற்றுவதற்காக தற்பொழுது ஜி7 நாடுகள் ஒருங்கிணைந்துள்ளன. தொடர்ந்து இரண்டாவது வாரமாக, அமேசான் காடு அணையாமல் எரிந்து வருகிறது. பிரச்சனை பெரிதாகிக் கொண்டே வருவதால், அதனை என்ன செய்வதென்றுத் தெரியாமல் அனைவரும் கவலையில் உள்ளனர். இது ஒட்டு மொத்த உலகத்தையுமே, பாதிக்கக் கூடிய விஷயம் என்பதை, எந்தத் தலைவரும் மறுக்கவில்லை.
பிரான்ஸ் அதிபர் இது குறித்து செய்துள்ள டிவீட்டில், நம்முடைய வீடு தீப்பற்றி எரிந்து வருகிறது எனக் பதிவிட்டுள்ளார். இந்த அமேசான் காடுகளே, உலக ஆக்சிஜனில் 20% வெளியிடுகின்றன. அதே போல், பாதிக்கும் மேலான நச்சு வாயுவினை ஏற்றுக் கொள்கின்றன. இப்படிப்பட்ட ஒரு இயற்கை வரத்திற்குப் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால், அனைவரும் கவலைப்படுகின்றனர்.
அமேசான் காடுகளில் வாழும் பழங்குடியின மக்கள், நாங்கள் எங்கள் உயிரைக் கொடுத்தாவது இந்த அமேசானக் காப்பாற்றுவோம் எனக் கூறியுள்ளனர். ஒரு வாரமாகக் கண்டு கொள்ளாத பிரேசில் அரசாங்கம், உலக நாடுகளின் வற்புறுத்தலை அடுத்து, தற்பொழுது தீயணைப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளது.
ஆனால், பொலிவியா நாட்டு அரசாங்கம் மிக மும்முரமாக, இதனை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அவர்கள் பெரிய போயிங் ரக விமானங்களை வாடகைக்கு எடுத்துள்ளனர். அதில் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீரினை சேகரித்து, தீப்பிடித்து எரியும் இடங்களின் மீது, தெளித்து வருகின்றனர். மேலும், ஹெலிகாப்டர் மூலம் தண்ணீரினைத் தெளித்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எவ்வாறு இருப்பினும், பிரேசில் பகுதியிலேயே பெரும்பாலான அமேசான் காடுகள் இருப்பதால், அவர்கள் இதற்கு இன்னும் முன்வரவில்லை. அங்குள்ளப் பகுதிகளில் காடுகளை அழித்து, தொழிற்சாலைகளை ஆரம்பிக்கவே இத்தகைய செயல்களை அரசாங்கம் கவனிக்கவில்லை என, சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
தற்பொழுது லட்சக்கணக்கான தீயணைப்பு வீரர்களும், காவலர்களும், இராணுவ வீரர்களும் தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அமேசானைக் காப்பாற்றுங்கள். அது அவர்களை மட்டுமல்ல, உலகில் வாழும் ஒவ்வொரு உயிரையும் பாதிக்கும்.