ஆம்புலன்ஸ் மீது தாக்குதல்! அனாதையாக கிடைந்த டாக்டரின் உடல்! நீதிமன்றம் விசாரணை!

21 April 2020 அரசியல்
doctorsimon.jpg

நேற்று கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, மரணமடைந்த மருத்துவரின் உடலினை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடதப்பட்டு உள்ளது.

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில், நரம்பியல் நிபுணராக பணியாற்றி வந்தவர் சைமன். 55 வயதான சைமனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதன் காரணமாக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். இருப்பினும், அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக அவர் அகால மரணமடைந்தார்.

அவருடைய உடலை, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்ய முயற்சித்தனர். அங்கு அவருடைய உடலினை, ஆம்புலன்சில் வைத்து எடுத்துச் சென்றனர். இந்த விஷயம் தெரிந்த அப்பகுதி மக்கள், அந்த ஆம்புலன்ஸை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அந்த ஆம்புலன்ஸை அடித்து நொறுக்கினர். ஆம்புலன்ஸ் ட்ரைவரையும் அடித்தனர். இதனால், ஆம்புலன்ஸ் ட்ரைவர் அங்கிருந்து ஓடிவிட்டார்.

பின்னர், இந்த விஷயம் போலீசாருக்குத் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார், அந்த உடலினையும், ஆம்புலன்சினையும் மீட்டனர். அந்த இறந்த மருத்துவரின் உடலானது, வேலங்காடுப் பகுதியில் உள்ள இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, போலீசார் பாதுகாப்பில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த விஷயத்தில், ஆம்புலன்ஸை தாக்கியவர்கள், ஓட்டுநரைத் தாக்கியவர்கள், சடலத்தினை அடக்கம் செய்ய விடாமல் தடுத்தவர்கள் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவ்வாறு செய்தவர்களை கைது செய்ய போலீசார் முயற்சித்து வருகின்றனர். இதனை, தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்காக எடுத்து விசாரிக்க உள்ளது.

HOT NEWS