அமெரிக்கத் தூதரகத்தின் மீது மீண்டும் தாக்குதல்! அதிகரிக்கும் பதற்றம்! ஈரான் மீது சந்தேகம்!

27 January 2020 அரசியல்
americanembassy.jpg

ஈராக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது, தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.

ஈராக்கில் அமெரிக்க தூதரகமானது, பாதுகாக்கப்பட்ட பசுமைப் பகுதியில் அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் அவ்வப்பொழுது ஏவுகணைத் தாக்குதல் நடைபெற்று வருவதால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பீதியில் இருந்து வந்தனர். இந்நிலையில் திடீரென்று மூன்று ஏவுகணைகள் மூலம், அந்த தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், இரண்டு ஏவுகணைகள் தூதகரத்திற்கு அருகிலும், மற்றொன்று அங்கிருந்து உணவகத்திற்கு அருகிலும் விழுந்து வெடித்துள்ளது.

இதில் அப்பகுதியில் இருந்த மூன்று வீரர்கள் காயமடைந்துள்ளதாக, அங்கு செயல்பட்டு வரும் செய்தி நிறுவனங்கள் தகவல் அளித்துள்ளன. இதுவரை, இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. எனினும், இந்தத் தாக்குதலை ஈரான் செய்திருக்கலாம் என கணிக்கப்படுகின்றது.

இந்நிலையில், ஈராக்கில் ஏற்கனவே அமெரிக்கப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என, அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், உங்கள் நாட்டில் அதிக விலைமதிப்புடைய உயர்ரக விமான தளத்தினை நாங்கள் உருவாக்கி உள்ளோம். அதற்கான பணத்தினை தந்தால் நாங்கள் வெளியேறுவோம் என, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார்.

இந்த சூழ்நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால், அமெரிக்க அரசாங்கம் ஈராக்கிடம், தங்களுடைய தூதரகத்திற்கும் அமெரிக்காவினைச் சேர்ந்தவர்களுக்கும் உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, இதனை ஈரான் தான் செய்திருக்க வேண்டும் என, ஈராக் நாட்டின் பெரும்பாலான செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஈராக், எங்களைத் தேவையில்லாமல் போருக்கு அழைக்காதீர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை ஈரான் நாடு தான் செய்துள்ளது என்பதற்கு, போதிய ஆதாரம் இல்லை. மேலும், ஈரான் ஆதரவு பெற்ற படைகள் அப்பகுதியில் அதிகம் உள்ளன. அவைகள் இதனை செய்திருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.

HOT NEWS